இன்றைய மத்திய தர வர்கத்தின் பெரும் கனவு சொந்த வீடுதான். சொந்த வீடு வாங்காமல் என்னதான் பிள்ளை குட்டிகளை படிக்க வைத்து, அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்பி, ஆஸ்திரேலியாவில் கல்யாணம் கட்டி கொடுத்தாலும், வாழ்ந்த திருப்தி கிடைக்காது.
அதனால்தான் ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து பாதுகாத்து வந்த பல ஏக்கர் நிலத்தை விற்று சென்னையில் ஆயிரம் சதுர அடி பிளாட் வாங்க முன்பணம் கட்ட நாம் தயங்குவது இல்லை. அதன் பின் நம் வாழ்க்கையின் மொத்த வருவாயையும் சுமார் ௨௦ ஆண்டுகளுக்காவது EMI கட்டிக்கொண்டு இருப்போம். எவ்வளவு பெரிய அபத்தம்? நிற்க.
அபத்தம் என்று தெரிந்தும் நாங்கள் அதை செய்யத் துணிந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு VGN developers இருங்காட்டுக்கோட்டையில் ஆரவாரமாக ஆரம்பித்த BRIXTON - Integrated Township சென்று மாடல் பிளாட் பார்த்தோம். பிடித்திருந்தது. அதுவும் கம்பெனிக்கு நேர் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் இருந்ததால் வேறு ஏதும் யோசிக்கவில்லை. அங்கே எங்களைப்போல விசாரிக்க வந்தவர்கள் VGN மிகவும் நம்பகமான நிறுவனம் என்று பரவலாக பேசிக்கொண்டதைப்பார்க்கவும் ஏதோ கடவுளே பார்த்து எங்களை அங்கு அனுப்பிவைத்ததாக நினைத்துக்கொண்டோம்.
மேலும் இந்த வளாகம் மிகப்பெரியது..கிட்டத்தட்ட ௨௦௦௦ வீடுகள், உள்ளேயே நகரின் சிறந்த பள்ளியின் கிளை, திரை அரங்குகள், நூலகம், நீச்சல் குளம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கான இடங்கள், அது..இது,என்று ஏகப்பட்ட வசதிகள் வரப்போவதாகவும் சொன்னார்கள்.அதற்கு பராமரிப்பு கட்டணமாக சொற்ப தொகை ஒன்றை மாதம் தோறும் கொடுத்தால் போதும் என்று சொல்லவும் இந்த VGN முதலாளியின் படத்தை மறக்காமல் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
ஏற்கனவே மாடல் ப்ளாட்டைப் பார்த்து வாயைப் பிளந்து நின்ற எங்களை வீழ்த்த சேல்ஸ்மேன்கள் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.மிக எளிதாக விழுந்தோம். அதுசரி நமக்கு என்ன முன்னே பின்னே செத்து பழக்கமா? இந்த விஷயத்தில் உள்ள எந்த உள்குத்துகளையுமே நாங்கள் அறிந்து இருக்கவில்லை. நாங்கள் நம்பியது ஒரே விஷயம்தான். அது VGN என்ற பெயர். அனேகம்பேர் அவர்களைப்பற்றி மிக நல்லவிதம்மாக சொன்னதால், ஹமாம் சோப் போட்டு குளிக்கும் குழந்தைபோல மிக பாதுகாப்பாக உணர்ந்தோம். சரிபார்க்கவேண்டியது என நாங்கள் நினைத்தது கட்டிடம் வாஸ்த்துபடி உள்ளதா என்று மட்டுமே. மற்றபடி இந்த வளாகத்திற்குள் தேவலோகமே வரப்போவதாகச் சொன்னார்கள். இன்றைய தினத்தில் இருந்து இரண்டே வருடம், உங்கள் வீடு உங்கள் கைகளில் இருக்கும் என்று பசப்பினார்கள். கண்ணை மூடிக்கொண்டு காட்டிய இடத்தில் எல்லாம் கைஎழுத்துப்போட்டோம். அக்ரீமென்ட்டையெல்லாம் வாசித்து பார்க்கவே அவர்கள் அவகாசம் தரவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக VGN என்ற பிம்பம் எங்களை அப்படி யோசிக்க விடவில்லை.
ஆயிற்று..முன்தொகை 15% , கட்டி ஒரு மாதத்தில் மற்றொரு 15% தொகை பின்பு மீண்டும் ஒரு மாதத்தில் 25% தொகை (வங்கி கடன்) என்று எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்பே 55% தொகை எங்களிடம் பிடுங்கப்பட்டது.
ஒரு வருடம் ஒன்றும் நடக்கவில்லை. வாங்கியவர்களுக்கு சொரணை வந்து கேட்க ஆரம்பிக்கவும் பற்பல சால்ஜாப்புகளுக்கு பின் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஆரம்பித்தார்கள். கட்டுமானம் ஒரே சீராக நடக்காமல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து கட்டினார்கள். அப்போதே விழித்துக்கொண்டு இருக்கவேண்டும். என்ன செய்ய விதி வலியது அல்லவா?
அவர்கள் சொன்ன இரண்டு வருடம் கடந்த போது பாதி வேலை கூட முடிந்திருக்கவில்லை. மீண்டும் போய் என்ன ஏதென்று கேட்டபோது ஒப்பந்தப்படி இன்னும் ஆறு மாதம் grace பீரியட் இருக்கிறது. அதற்குள் முடித்து விடுவோம் என்றார்கள்.
Grace பீரியடா? அப்பிடின்னா? அடித்து பிடித்து வீட்டில் போய் அக்ரீமேன்ட்டை பார்த்த போதுதான் தெரிந்தது நாங்கள் கைப்புள்ளைக்கே கைப்புள்ளை என்று. ஒரு வாடிக்கையாளரை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்று அந்த அக்ரீமென்ட் மூலம் ஒரு பாடமே எடுத்து இருந்தார்கள்.
பாடம் 1
கீழே உள்ள அட்டவணை இதைப்புரிந்து கொள்ள உதவும் என எண்ணுகிறேன். இது ஒரு 4 மாடி கட்டிடம் கொண்ட அபார்ட்மெண்டின் மாதிரி payment schedule.
Payment
Schedule
|
|
| Stage | Payment |
| Booking Advance | 15% |
| Within 30 days of booking | 15% |
| During Basement | 25% |
| Completion of First floor | 10% |
| Completion of2nd floor | 10% |
| Completion of 3rd floor | 10% |
| Completion of 4th floor | 10% |
| During Handover | 5% |
| Total | 100% |
ஆக இந்த அட்டவணைப்படி எடுத்துக்கொண்டால் வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே நம்மிடமிருந்து 55% தொகையை கறந்து விடுவார்கள். அதன்பின்பு 1 வருடம் மொத்த ப்ரொஜெக்ட்டும் விற்பனையாகும் வரை நம் பணத்தை வைத்து ரொட்டேசன் செய்வார்கள்.ஒரு வேலையும் ஆரம்பித்து இருக்க மாட்டார்கள். அதாவது அது அவர்களுக்கு நாம் தரும் வட்டி இல்லாத கடன்..அதன் பின்பு வேலை ஆரம்பித்து கட கட வென்று 4 மாடிக்கான structure மற்றும் சுவர்களை எழுப்பி விடுவார்கள். இதுவரை அவர்களுக்கும் எளிதுதான். ஆனால் பின்பு வரும், ஏரியா டெவெலப்மென்ட் மற்றும் amenities தான் பிரச்சனையே. அதிக நேரமும் செலவும் பிடிக்கும். அதனை பற்றி அட்டவணையில் எங்கும் இருக்காது. நான்காவது மாடிக்கு அடுத்து நேரிடையாக Hand over என்று பொத்தம் பொதுவாக குறிப்பிட்டு இருப்பர். சரி இதில் என்ன ஏமாற்று வேலை?
எப்படியும் இவர்கள் சொன்ன நேரத்திற்குள் கட்டி முடிக்கப்போவது இல்லை. ஆகையால் விற்பனை ஒப்பந்தம் போடும்போதே சந்தடியில்லாமல் Grace Period என்ற ஷரத்தை ஓசைப்படாமல் சொருகி இருப்பர். இதைப்பற்றியெல்லாம் ப்ளாட்டை விற்கும்போது மூச்சுகூடவிடமாட்டார்கள். நம்மில் பலர் ஒப்பந்தத்தின் முதல் பக்கத்தை படிக்கும்போதே மொழியின் கடுமையால் (அதிகபட்ச சட்ட நுணுக்கம் கொண்ட ஆங்கிலம்) கொட்டாவி விட்டு மூடிவிடுவோம். பெரும்பாலும் நமக்கு ஒதுக்கப்பட்ட பிளாட்டின் அளவுகள், விலை இதுபோன்ற மேலோட்டமான விஷயங்களைப்பார்த்து விட்டு போய்விடுவோம்.அதனால் (GP)grace period சமாச்சாரமே நமக்கு தெரியாது. அந்த GP யையும் தாண்டி இவர்கள் இழுத்துக்கொண்டே போனால் தாண்டி போகும் ஒவ்வொரு மாதத்திற்கும் அவர்கள் இழப்பீடு தரவேண்டும். அங்குதான் சூட்சுமமே..
சாதாரணமாக எந்த ஒரு கட்டுமான நிறுவனமும் குறித்த நேரத்திற்குள் முடித்து தரவில்லையெனில் ஒப்பந்த முடிவு நாளில்(Planned handover) இருந்து actual hand over வரை ஒவ்வொரு மாதமும் அதுவரை செலுத்தப்பட்ட பணத்திற்கு நடப்பு வங்கி வட்டி விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும். ஆனால் நமது பெரிய அண்ணன் VGN போட்ட ஒப்பந்தப்படி 95% பணம் செலுத்தி விட்டீர்கள், நாங்கள் நான்காவது தளம் வரை கட்டிடம் கட்டியாயிற்று. அதனால் கணக்கு சரியாகிவிட்டது. ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து சதவீதம் வேலைதான் மீதம் உள்ளது.(அதாவது development அண்ட் amenities) அதற்குறிய தொகையான 5% க்கு மட்டுமே வட்டி கொடுக்க முடியும் என்று சொல்கிறது. அதனை முடிக்க தோரயமாக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் GP எல்லாம் தாண்டி இரண்டு ஆண்டுகள். அதாவது அந்த இரண்டு ஆண்டுகளும் நாம் 95 Lacக்கு வட்டி கட்டிகொண்டிருப்போம் ஆனால் அண்ணன் 5 Lacக்கான வட்டியை மட்டுமே திருப்பி தருவார். எப்பூடி?!!!
சரி தொலைந்து போங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து போடும் முன்பு இதை சரிபார்காதது நமது தவறுதான். அந்த ஐந்து சதவீத தொகைக்காவது நீங்கள் சொன்ன மாதிரி இழப்பீடு கொடுங்கள் என்றால் அடுத்த குண்டை போட்டார்கள்.
அதாகப்பட்டது, மேற்சொன்ன அட்டவணைப்படி stagewise payment செலுத்தும்போது ஒவ்வொரு முறையும் பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை தாமதம் செய்து இருக்கிறீர்கள். இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஆகிவிட்டது. அதை கூட்டி கழித்து பார்த்தால் நீங்கள்தான் எங்களுக்கு பல ஆயிரங்கள் இழப்பீடு தரவேண்டியிருக்கிறது என்கிறார்கள்..ஆஹாக..அபாரம்...இது பாடம் எண் 1.
பாடம் 2
சரி போய் ஒழியுங்கள்..வீட்டை சீக்கிரம் கொடுங்கள்.வாடகை கொடுத்து மாளவில்லை என்று கேட்டோம். சரி inspectionக்கு வாருங்கள். வந்து No Dues என்று எழுதிக்கொடுத்துவிட்டு மீதம் தரவேண்டிய 5% தொகையை கொடுத்துவிட்டு தாராளமாய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
வீட்டை பார்த்ததும் செத்தே போய்விட்டோம்.
- முதலாவதாக மாடல் ஹௌஸ் இல் காட்டிய எதற்கும், கட்டப்பட்ட வீட்டின் தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
- வீட்டிற்க்கு EB இணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை.
- amenities என்ற பெயரில் இவர்கள் சொன்ன எதுவும் ( நீச்சல் குளம், நடைப்பயிற்சி பகுதி, தியேட்டர், பூங்கா, STP, RO, நூலகம், வணிக வளாகம், கடைகள், இன்னும் என்னனவோ...)உருவாக்கப்படவில்லை.
- தண்ணீர்- சுத்தமாக இல்லை. 6 போர்கள் போட்டும் தேவையான தண்ணீர் இல்லை. இதனை மிக கேஷுவலாக அவர்கள் சொன்ன போது எனக்கு பகீர்ரென்றது... 2000 குடியிருப்புகள் கொண்ட வளாகம் அமைப்பவர்கள் தண்ணீர் பற்றிய ஆய்வு செய்யாமலா இருந்திருப்பார்கள்? சண்டையிட்டு water table study ரிப்போர்ட்டை வாங்கினோம். அதில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மத்துவம் தான் என்று. இவர்களை என்ன செய்தால் தகும்? ஆக தண்ணீர் இல்லை என்று தெரிந்தும் ௨௦௦௦ வீடுகளை கட்ட துணிந்து இருக்கிறார்கள். என்ன ஒரு அலட்சியம்?!!!!!
- தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால் அவுட்சோர்சிங் தான் , என்ன மாதம் ஒரு 1500 ரூபாய் அதிகம் வரும் என்கிறார்கள்.
- இதில் எனது பயம் என்னவென்றால் இவர்களது அலட்சியம் தண்ணீர் விஷயத்தில் மட்டுமா இல்லை ஒட்டு மொத்த கட்டுமானதிலுமா? basement எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும்? முறையாக மண்பரிசோதனை செய்திருப்பார்களா?
- கரெண்ட்? நாங்கள் என்ன செய்வது EB கனெக்சன் தர தாமதம் ஆகும்.அதுவரை உங்களுக்காக generator வைத்து சப்ளை செய்கிறோம்.அதற்க்கு தனியாக மாதம் ஒரு 2500ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்கிறார்கள்.
- ஆக இவர்கள் வீடு hand overக்கு தயார் என்று கூறிய பொது அங்கு தற்கால மனிதன் வசிப்பதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை. கற்கால மனிதன் முயற்சி செய்யலாம். ஆனால் கரென்ட் கனெக்சனே இல்லாமல் No Dues என்று formஇல் எழுதி தர சொல்லுகிறார்கள்.அதற்கான தொகையை முதலிலேயே வாங்கிகொண்டு ... என்னே ஒரு நெஞ்சழுத்தம்...திமிர்...
- இது தவிர maintenance பீஸ் தனியாக சதுர அடிக்கு 2.50 ரூபாய் வீதம் கொடுத்து விடுங்கள்.சிம்பிள் என்கிறார்கள்.
- ஆக மொத்தம் ஒரு 1000ச.அ 2BHK பிளாட்டிற்கு மாதம் ரூ.6500 (EB,தண்ணீர்,பராமரிப்பு) தண்டம் அழுது நான் குடியிருக்கும் வீட்டை சொந்த வீடு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
இதனை ஒரு சுய பொலம்பலாக சொல்லவில்லை. ஒருவேளை இது யாருக்காவது பயன்படலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
மற்றபடி இவர்களை விட்டு விடுவதாய் இல்லை. இங்கு வீடு வாங்கிய அனைவருக்குள்ளும் இதன் காரணமாய் கோபம் பொங்குகிறது..இவர்களை விடக்கூடாது என்றுதான் தோன்றும்.ஆனால் பல்வேறு காரணங்களால் யாரும் ஒன்று சேரவோ, ஒரு குழுவாய் சென்று VGN உடன் மல்லுக்கட்டவோ முடியவில்லை. இன்றைய வாழ்க்கை முறை நமக்கு இதை எல்லாம் கவனிக்க நேரம் கொடுப்பதில்லை. வேலைப்பழு அழுத்துகிறது. எதெற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டுமா என வீட்டிற்குள் இருந்தே குரல் வருகிறது.
மேற்கூறிய நமது பலவீனங்களே VGN போன்ற ஏமாற்று நிறுவனங்களின் பலம்...
பார்போம்.
உங்க கதையச் சொல்லிட்டீங்க. நான் மும்பை ஹீரானந்தினி பில்டர்ஸைப் பார்த்து, ஓ.எம்.ஆர் ரோட்டில் உள்ள ஹிரானந்தினியில் வீடு வாங்கினேன். அந்தக் கதையைச் சொன்னால் இது மாதிரிதான் இருக்கும். சொந்த வீட்டுக்கு மெயின்டனன்ஸ்னு பத்தாயிரம் பக்கம் மாதத்துக்கு வந்துரும்போல் இருக்கிறது. நல்லாத்தான் குடுக்கிறாங்கய்யா விளம்பரம்..
ReplyDelete@ நெல்லைத் தமிழன் same blood?!!!
ReplyDeleteநடுத்தர வர்க்கத்தினால் என்ன செய்துவிட முடியும்? புலம்பத்தான் முடியும். நீங்கள் சொல்லும் அனுபவங்களும், அறிவுரைகளும் ஒத்துவராது.
ReplyDeleteநமக்கு அப்படி நடக்காது என்று கூறிவிட்டு மக்களும் அதே தவறை வித்தியாசமாக செய்வார்கள்.
வருகைக்கு நன்றி திரு.பக்கிரிசாமி.,
Deleteஇந்த இடுகையின் நோக்கமே நம்மளவில் இருக்க வேண்டிய அடிப்படை விழிப்புணர்ச்சி பற்றியதுதான். ஏமாற்றுபவர்கள் எப்போதும் விழிப்பாகத்தான் இருப்பார்கள். வலையை விரித்துக்கொண்டுதான் காத்திருப்பார்கள், நாம் கவனமாக இருந்தால் கடந்து போய்விடலாம் அல்லவா?
உதாரணமாக நான் கட்டுமான ஒப்பந்தத்தை ஒழுங்காக படித்திருந்தாலே VGNஐ தவிர்த்து இருந்திருப்பேன். இத்தனை துன்பம் இருந்திருக்காது. அதைத்தான் நான் சொல்ல வந்தேன். நன்றி.
மன்னிக்கவும். ஒத்துவராது என்பதற்கப்புறம் கமா-வை விட்டுவிட்டேன். ஒத்துவராது என்று கூறி அனேகர் ஃபாலோ பண்ண மாட்டார்கள் என்றுதான் கூறவந்தேன்.
Deleteதங்கள் அனுபவ அறிவுரை மிகவும் நன்மையளிக்கக்கூடியதுதான். நன்றி.
தங்களுடைய ப்ளாக்கர் ஒவ்வொரு முறையும் வெரிஃபிகேஷன் கேட்கிறது. விருப்பப்பட்டால் செட்டிங்க்-ல் அதனை நீக்கிவிடவும்.
நன்றி , வேர்ட் வெரிபிகேஷன் - நீக்கப்பட்டு விட்டது..
Delete