சென்னைக்கு வந்து 20 வருடங்கள் முழுமையாகக் கடந்து விட்டது. கல்லூரியில் 3 வருடங்கள் விடுதியில் இருந்தது தவிர்த்து 17 வருடங்கள் வாடகை வீட்டில்தான் வாசம். அதிலும் முதல் 7 வருடங்கள் நண்பர்களுடன் flat எடுத்து வாடகையை பகிர்ந்துகொண்டேன். உடனே உங்களுக்கு திருவல்லிக்கேணி பாழடைந்த மேன்சன் எல்லாம் ஞாபகத்திற்கு வரக்கூடாது.பெயர்தான் பேச்சிலர் ரூம். மற்றபடி, பெசென்ட் நகர் மெய்ன் ரோட்டில் 750 ச.அ யில் வசதியான ஹால்,குளியல் அறை,சமையல் அறையுடன்.,சமைக்க, துவைக்க தனியாக ஆள் போட்டு சகல சம்பத்துகளுடந்தான் இருந்தோம். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. அந்த 7 வருடங்களும் பிரச்னை இல்லாமல் குப்பை கொட்ட முக்கிய காரணம் அரை நண்பர்களின் easy going policy தான்.
நாங்கள் மொத்தம் 6 பேர் இருந்தோம். பெரும்பாலும் ஒரே பகுதியில் இருந்து வந்தவர்கள் (தேனி மாவட்டம்). கல்லூரி காலத்தில் இருந்தே குரூப் சேர்ந்துவிட்டோம். அது மிக வசதியாகப் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், சோற்றுக்கு ஜிங்கு ச்சா அடிக்கும் நிலையில் யாரும் இல்லை. இரண்டு பேர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பகுதிநேர பி.டெக் கை முழு நேரமாக படித்து வந்தார்கள்.அவர்களுக்கு வீட்டில் இருந்து நிதி உதவி வந்து கொண்டு இருந்ததால் பிரச்னை இல்லை. மற்றவர்கள் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சிறிய வேலைகளிலாவது தொத்திக்கொண்டு இருந்தோம். பெரிதாக இல்லை என்றாலும் நிலையான வருமானம் இருந்தது. ஆகையால் இந்த கூடிவாழும் கான்செப்ட் எங்கள் அளவில் வெற்றிகரமாகவே செயல்பட்டது. மொத்தம் 1500 ரூபாய் கொடுத்து விட்டால் போதும், வாடகை, சாப்பாடு, துணி துவைத்து அயர்ன் செய்வது தவிர வாரம் ஒருமுறை சினிமா, ஞாயிற்றுக்கிழமை 2 பீர் வரைக்கும் அறை கணக்கிலேயே முடிந்து விடும். ஒட்டுமொத்த கணக்கு வழக்கு, நிர்வாகம், வேலைக்காரிகளை கண்காணித்தல், மளிகை சாமான்கள் வாங்குதல் போன்றவை எல்லாம் பகுதி நேர படிப்பாளிகள் பார்த்துக்கொள்வர்கள். மாதமானால் நம் பங்கு ஈவுத்தொகையை அவர்களிடம் கொடுப்பது மட்டும் நம் பொறுப்பு.
இடியே விழுந்தது போன்ற பிரச்னைகள் கூட "விட்றா! விட்றா!! எப்பிடிப்பாத்தாலும் நம்ம பய" என்ற வடிவேலுவின் வசனத்தால் ஓரம்கட்டப்படும். அனைவரின் குடும்ப அங்கத்தினர்களும் எங்கள் எல்லோருக்கும் பரிச்சயம், ஆகையால் சிலசமயம் பெரிதாக ஏதேனும் சண்டை வந்து யாருடனாவது பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டால் ஏதாவது ஒருவரின் வீட்டு பெரிசு பஞ்சாயத்திற்கு வந்துவிடும். மற்ற அரை நண்பர்கள் ஒரு சொம்பு நிறைய நீருடனும், ஒரு அட்டைபெட்டி நிறைய பீருடனும் தயாராக இருப்பார்கள்.
பஞ்சாயத்து தீர்ப்பு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
" எலேய் கேனப்பயளுகளா ஊரு விட்டு ஊரு 500 கல் தாண்டி வந்து இருக்கீக... ஒழுங்கு மருவாதியா ஒருத்தனுக்கு ஒருத்தன் ஒத்தாசையா இருந்து பலகுங்கடா.. உங்க அப்பனுங்க எல்லாம் என்னா பெரிய கப்பல் செட்டிகளா?. ஏய் மாப்புள ஒனக்குலாம் என்னய்யா ஆச்சு? ஒன்கப்பன்லாம் எப்டியாகொந்த ஆளு? நீ அப்பிடி இருக்க வேணாமா? ஒன்னையெல்லாம் எம்புட்டு வெவரமான ஆளுண்டு நெனச்சிக்கிருக்கம்.. இப்பிடி சிறுபுள்ளத்தனமா இருக்கே" என்று கொத்தி விட்டு போவார்கள். அதற்குப்பிறகு அன்று இரவே சண்டை முடிவுக்கு வரும்.
உண்மையில் பிரச்னையை தீர்க்கும் வல்லமை அந்த பஞ்சாயத்துக்கு இல்லை என்றாலும் அதற்கப்புறம் வரும் Dr.OLD MONK அல்லது, Teacher's மிக கச்சிதமாக முடித்து வைப்பார்கள்.
ஒருநாள் கூட காசில்லாமலோ, பசி பட்டினி என்பதையோ பார்த்தது கிடையாது. நான் ஒரு நான்கு வருடம் கழித்து வேலையை விட வேண்டியது வந்தது. அதுவரை தடையில்லாமல் வந்து கொண்டிருந்த வருமானம் திடீரென்று நின்று போகவும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன். ஆனால் எனது கூட்டம் என்னை கைவிடவில்லை. உண்பதற்கும், உறங்குவதற்கும் உத்திரவாதம் இருந்ததால் அடுத்து ஒரு வேலையை தேடிக்கொள்ள எனக்கு அதிக நாள் தேவைப்படவில்லை. முந்தையதை விட நல்லதொரு வேலை நான் விரும்பிய Automotive துறையிலேயே அமைந்தது. நிற்க.
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்லுகிறேன்?
நான் இப்போது ஒரு நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக இருக்கிறேன். எனக்கு கீழ் ஒரு 120 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அனைவரும் ITI அல்லது +2 முடித்து விட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வேலையில் இருக்கிறார்கள்.பெரும்பாலும் வெளியூர் ஆட்கள் , 21 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆனவர்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.குறைந்த பட்சம் மாதம் 9௦௦௦ முதல் 12௦௦௦ வரை சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கம்பெனியே தருகிறது. வந்து செல்ல கம்பெனி பஸ் இருக்கிறது. இது தவிர்த்து வேறு சில அலவன்ஸ் களும் கிடைக்கிறது. ஆனாலும் 20 தேதிகளுக்கு மேல் தயங்கி தயங்கி வந்து சார் ஒரு 1௦௦௦ ரூபாய் வேணும் சார் ரொம்ப அர்ஜென்ட் என்பார்கள். நான் இது மாதிரி நேரங்களில் ரொம்ப கேள்வி கேட்பதில்லை. கையில் இருந்தால் கொடுத்து விடுவேன்.
ஆனால் காலப்போக்கில் ஒருவர் கேட்டது போய் பலரும் கேட்க ஆரம்பித்தார்கள், அதிலும் ஒரு சுழற்சி முறையை அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஒருமாதம் ஒரு 10 பேர் அதற்க்கு அடுத்த மாதம் அடுத்த 10 பேர் என்று மாற்றிக்கொள்வதை நான் உணர ஆரம்பித்தேன். என்னை "ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாய்ங்க போல. ஆனால் நான் கொஞ்சம் கடுப்பாகி விட்டேன். போன மாதம் கடைசியில் வந்த கும்பலிடம் கேட்டுவிட்டேன். எல்லோரும் தனித்தனியாக சொன்னாலும் பதில் பெரும்பாலும் ஒன்றுதான்.
"வாங்குற சம்பளம் எங்க சார் பத்துது? வாய்க்கும் வகுத்துக்குமே பத்தலை.எங்களை என்ன பண்ண சொல்றீங்க?"
இந்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஒருவேளை குடும்பத்துக்கு ஏதேனும் தருகிறார்களா என விசாரித்தபோது அவர்கள் என்னை கடுப்போடு பார்த்து மேலே சொன்ன பதிலை ரிபீட் செய்தார்கள்.
இப்போது நான் கொஞ்சம் சீரியஸ் ஆக விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன். வாங்குற சம்பளத்துக்கு என்னய்யா செலவு என்று கேட்கவும் சார் ரூம் வாடகை மட்டும் 3000. அப்புறம் மெஸ் செலவு மாசத்துக்கு 2000 வரைக்கும். அப்புறம் வாரம் ஒருதடவை வெளியே போவோம் சார் அன்னிக்கி எப்படியும் 1000 வரைக்கும் செலவு ஆகிடும். வேற என்ன சார் மிஞ்சும்? வீட்டுக்கு எங்க அப்பா எப்பிடியும் ஒரு 1000 வரை கேப்பார் . அதுக்குதான் உங்க கிட்ட கடன் கேக்குறோம் சார். என்று சொன்னார்கள். இதில் முக்கியமான ஒன்று இவர்கள் பெரும்பாலும் தனி அறைகளிலோ அல்லது இரண்டு பேர் படுத்துக்கொள்ளமட்டும் முடிகிற மான்சன் களிலோ தான் தங்குகின்றனர். சமைத்து சாப்பிடும் கன்செப்ட் இல்லை. மெஸ்களிலோ , ஹோட்டலிலோ தான் சாப்பிடுகின்றனர். வருமானத்திர்கேற்ப செலவு என்பதெல்லாம் பழங்கதை. அனைவருமே 40000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் வைத்திருக்கிறார்கள். திட்டமிடல் என்பது சுத்தமாக இல்லை.
இதே கதைதான் திருவல்லிக்கேணியை நிறைத்து வைத்திருக்கும் வேலையில்லாபட்டதாரிகள் நிலையும். இன்றைய சூழ்நிலையில் ரூ.5000 சம்பளத்தில் ஒரு வேலை வாங்குவது பெரிய கொம்பு ஒன்றும் கிடையாது. கண்டிப்பாக யார் வேண்டும் என்றாலும் வாங்க முடியும். ஆனால் வெட்டியாக, பசித்த வயிற்ரை தடவிக்கொண்டு, மோட்டுவளையை பார்த்தபடி படித்திருப்போமே தவிர சேல்ஸ் மேன்வேலையெல்லாம் பார்க்க மாட்டேன் என்று இருப்பவர்கள் அநேகம் பேர். இவர்கள் எல்லாம் முன்மண்டை முடியெல்லாம் உதிர்ந்து அரைக்கிழம் ஆனாலும் கூட உருப்படாமல் கொண்ட கொள்கை மாறாமல் அப்படியே இருப்பது உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. காலப்போக்கில் இவர்கள் வேலை தேடுவதை எல்லாம் விட்டுவிட்டு யாரையாவது அண்டிப்பிழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்க்கு பழகிய பின் உடம்பு, மனது எதுவும் வளைவது இல்லை. ஆனால் இவர்கள் தங்களுக்குள் ஒரு கழிவிரக்கத்தை செயற்கையாய் வளர்த்துக்கொள்கிறார்கள். உலகம் நம்மை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். யாராவது நல்ல எண்ணத்தோடு எதாவது சொல்லப்போனால்
"ஒனக்கெல்லாம் என்னா தெரியும்? ஒரு நாளாவது சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சிருக்கியா? கையிலே காலணா இல்லாம இருந்திருக்கியா?" என்று தளபதி ரஜினியின் டையலாக் பேசுவார்கள்.
இவர்களுக்கும் சரி, என் கம்பெனி மக்களுக்கும் சரி இந்த பதிவின் முதல் இரண்டு பாராக்கள் சமர்ப்பணம். 2001~2004 களில் 1500 ~ 2500 ரூபாய்களில் சாத்தியமான விஷயம் இன்று 5000~7500 ரூபாய்களில் முடியும். அதற்கான திட்டமிடலும், உழைக்க தயாரான மனமும் போதும்... திருவல்லிக்கேணியின் குசேலர் தனத்தை விரட்டியடிக்க.
எனது வாழ்க்கையில் நான் கண்டுகொண்டது ஒரு விஷயம் தான். எனது careerன் ஆரம்பத்தில் எனது உணவு, உடை, இருப்பிடம் இதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் எந்த ஒரு வேலையையும் செய்ய தயாராய் இருந்தேன். அதுவே எனக்கு பெரும் நிம்மதியையும் எனது இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கு வழியையும் அளித்தது. அடிப்படை தேவைகளை பெறுவதே போராட்டமாக இருந்தால், அதற்கே நம் அனைத்து சக்தியையும் செலவழித்தால் வாழ்க்கையின் லட்சியம் பற்றி எப்படி யோசிக்க முடியும்?
கிடைத்த வேலை என்று சேர்ந்து விட்டால் பின்பு படித்த படிப்புக்கான வேளையில் சேர்வது கடினம் என்று கூறுபவர்கள் அதனை சரியான நேரத்தில் யோசித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். நமது துறையில் தகுந்த ஆட்களை பிடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிப்பவர்கள் சில கடினமான தருணங்களை தாண்டித்தான் வரவேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கண்டிப்பாக ஒருவனுக்கு கடவுள் எல்லா கதவுகளையும் அடைத்து வைத்திருப்பது இல்லை. கொஞ்ச காலம் கிடைத்த வேலையை செய்து விட்டு தக்க தருணம் வந்ததும் சரியான இலக்கை அடைந்த நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.
உச்சமாக நாம் கருதும் I.T துறையில் சென்னையில் இருக்கும் மலையாளிகளில் பலரின் முதல் வேலை இங்குள்ள கேரளா உணவகங்களில் தான் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இதில் உள்ள நுட்பம் என்னவென்றால் அங்குதான் உணவும், படுக்க இடமும் இலவசம்.
No comments:
Post a Comment