ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு குடி போவதைத்தான் வீடு பெயர்தல் என்கிறேன்.இந்த வார்த்தைப் பிரயோகம் சரிதானா என்று தெரியவில்லை. தர்க்க ரீதியாக சரி என்றுதான் படுகிறது.இருக்கட்டும்.
இந்த 36 ஆண்டுகால வாழ்க்கையில் பலமுறை வீடு பெயர்ந்தாகிவிட்டது. சரியாக 10 வயதாகும்போது முதல்முறையாக வேறு வீட்டிற்கு போகவேண்டியிருந்தது. அதுவும் மிக விநோதமாக வீட்டைக்காலி செய்துவிட்டு எனது பெற்றோர்கள் ஒரு வீட்டுக்கும் நான், எனது தங்கை மற்றும் தம்பி வேறோர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊரில் விவசாயம் பொய்த்து விட்டதால் வீடு, நிலம் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு, மாடு கன்றுகளை விற்றுவிட்டு அப்பாவும், அம்மாவும் பிழைப்பு தேடி கேரளாவுக்கு பஸ் ஏறினார்கள். எங்களை பக்கத்து ஊரில் பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்த பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினார்கள். பாட்டியும் தாத்தாவும் அதே பள்ளியில் வாத்தியார்கள்...
அந்த சூழ்நிலையில் என் மன நிலை எப்படி இருந்தது என்பது எனக்கு இன்னும் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. எதுவும் ஒட்டவில்லை. யாரைப்பார்த்தாலும் கோவம் கோவமாக வந்தது. பாட்டி, தாத்தா செல்லம் கொடுக்கும் ஜாதி எல்லாம் இல்லை. பள்ளியிலேயும் சரி வீட்டிலும் சரி "வாத்தியார்களாக" மட்டுமே இருந்தார்கள். அப்பாவை நினைத்தாலே பெரும் சினமாய் இருந்தது. ஆனால் இன்று எண்ணிப்பார்க்கும்போது, எனது அப்பா அன்றைய தினங்களில் மனதளவில் எவ்வளவு நொறுங்கிப்போய் இருந்திருப்பார் என்று புரிகிறது. சொந்த ஊரில் முதலாளியாக, நான்கு குடும்பத்திற்கு படியளப்பவராக இருந்து விட்டு வேறோரிடத்தில் பஞ்சம் பிழைக்க கூலியாளாகச் செல்ல பெரும் மனத்திடம் வேண்டும். எங்கள் எதிர்காலம் நிமித்தமே அதனை தைரியமாக செய்தார் என்பது பிற்பாடு புரிந்தது.
ஆனால் எனது இந்த மனக்கிலேசம் எல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம்தான். வெகு இயல்பாய் புது இடத்தையும் சூழலையும் மனம் ஏற்றுக் கொண்டது. புது நண்பர்கள், எங்கள் ஊரில் நாங்கள் விளையாடியதைதவிர பல புதிய விளையாட்டுகள் என்று ஜாலி ஆகிவிட்டேன். ஆனால் இரவு நேரங்களில் மட்டும் ஒரு இனம்புரியாத தனிமையை உணர்ந்த ஞாபகம். அனேகமாக பால்ய காலத்தில் இருந்து பழகிய நண்பர்களை பற்றிய எண்ணமா? இல்லை எங்கள் வீட்டிற்கே இருந்த பிரத்யேக வாசனை இல்லாமல் வேறு ஏதோ வாசம் கொண்ட பாட்டியின் வீடா? என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஏறக்குறைய 1 வருடம் கழித்து எங்கள் ஊருக்கு சும்மா 2 நாள் விடுமுறைக்கு சென்ற போது மனதில் ஏதோதோ ஒரு குறுகுறுப்பு. ஊரில் போய் இறங்கியவுடன் சும்மா பேருக்கு கொஞ்ச நேரம் வீட்டில் இருந்துவிட்டு, உடனே வெளியில் பாய்ந்து ஓடினேன். நண்பர்களைத் தேடித்தான். பயபுள்ளைகள் ஒருவனையும் காணோம். மிகுந்த ஏமாற்றத்திற்கு பின்பு இரண்டொருவனைப்பார்தேன். அவர்களோ பெரிதாக எந்த பரபரப்பும் இல்லாமல் என்னை எதிர்கொண்டதில் எனக்கு எப்போடா இங்கிருந்து கிளம்புவது என்று ஆகிவிட்டது. அதற்கு பின் எங்கள் சொந்த ஊரில் நீண்ட நாள்கள் தாங்கும் வாய்ப்பு அமையவில்லை.
என் மொத்த வாழ்நாளில் பெரும்பான்மை காலம் சென்னையிலேயே கழிந்து விட்டதால், (இனிமேலும் கழியப்போவதால்) சென்னையே என் பிறந்த ஊர் போன்ற உணர்வு வந்து விட்டது.
இங்கு வந்த பின்பும் பல முறை சட்டி தூக்கியாகிவிட்டது. பேச்சிலராக இருந்தபோது கூட ஒவ்வொரு அறைக்கும் ஒரு வாசம் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த நுண்ணிய வாசமே வேறொரு வீட்டிற்கு மாற்றிகொண்டு செல்லும்போது படுத்தும். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காவது சரியாகத் தூக்கம் பிடிக்காது. வாசம் மட்டும் அல்லாது சில பழகிய சத்தங்கள், எப்போதும் எங்கிருந்தாவது கேட்டு கொண்டிருக்கும் பாட்டு, பழுதடைந்த பழைய மின்விசிறி எழுப்பும் ஒலி, டீக்கடைக்கென்றே ஸ்பெசலாக தயாரிக்கப்படும் ஸ்டவ் கிளப்பும் ஓசை, குறிப்பிட்ட நேரங்களில் அங்கு போடப்படும் வடை மற்றும் பலகாரங்களின் அடைந்து கிடக்கும் மணம் போன்றவைகள் ஒரு படிமமாக மனதிற்குள் புதைந்து விடுகின்றன. இது போன்ற சுற்றுப்புற காரணிகளின் அடிப்படையிலேயே நமது தினசரி நடவடிக்கைகளில் சில அமைந்து விடுகின்றன. உதாரணமாக வாடிக்கையாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு டீக்கடை/மெஸ் வரை சென்று டாப் அடிப்பது, இல்லை பக்கத்து வீட்டில் சென்று அரட்டை அடிப்பது போன்றவையை நாம் வழக்கப் படுத்தி கொண்டிருப்போம். வீடு பெயர்தலின்போது இவை அனைத்தும் திடீரென தடைபடுவதோ அல்லது வரிசை மாற்றி வழக்கப்படுத்தும் போதோ மனம் அசௌகரியப்படுகிறது.
கல்யாணத்திற்கு முன்பு தனியாளாக ஒரு வீட்டை விட்டு மற்றொரு வீட்டுக்கு மாறிச் சென்றது இல்லை. மொத்தமாக அதே நண்பர்களுடன் கும்பலாகத்தான் வீட்டை மாற்றிக்கொள்வோம். அப்போதும் கூட குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு கிர்ர் என்றுதான் இருக்கும். குறிப்பாக அருகில் ஏதாவது ஒரு டீக்கடைக்காரருடன் பழக்கம் வைத்துக்கொள்வது வரையாவது அந்த இடம் அன்னியமாகவே தோன்றும். நண்பர்களுடன் தங்கிய போது வீடு பெயர நேர்ந்தால் நாங்கள் முதலில் தேடுவது ஏதாவது மெஸ் அருகில் இருக்கிறதா என்பதுதான். நாங்கள் பெரும்பாலும் ஆள் வைத்து சமைத்துதான் சாப்பிட்டோம் என்றாலும், மாலை நேரங்களில் டாப்படிக்க மெஸ் தான் வசதி. கொறிக்க ஏதாவது வாங்கிக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்து கொள்ளலாம். மெஸ் ஓனருக்கு நமது பெயர் ஞாபகத்தில் நிற்க ஆரம்பித்துவிட்டது என்றால் நாம் அந்த ஏரியா வாசியாக மாறிவிட்டோம் என்று பொருள். கொஞ்சம் பழகி விட்டால் போதும், மெஸ் பிசியாக இருக்கும் நேரங்களில் ஓனர் நம்மை கல்லாவை கவனித்து கொள்ளுமாறு பணிவோடு சொல்லி விட்டு சப்ளையில் மும்முரமாகி விடுவது கூட உண்டு. இன்னொரு வினோதமான விஷயத்தையும் கவனித்திருக்கிறேன். ஏரியாவில் நாம் எப்போதுமே சென்றிருக்காத மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப்கள், ஹார்ட்வேர், எலெக்ட்ரிகல் , அடகுக்கடைக்காரர்கள் கூட நம்மை எங்காவது பார்த்தால் புன்னகைப்பார்கள். இதெல்லாம் என் பிரக்ஞையில் இருந்தது கல்யாணம் ஆகும் வரைதான்.
கல்யாணத்திற்கு பின் புதிதாக வேறு ஒரு ஏரியாவிற்கு மாறினோம். பெரிய வீடு. அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் கூட்டுகுடும்பமாக இருப்பது என்று திட்டம். அதற்காக 3 BHK கொண்ட பெரிய வீடு.அந்த அபார்ட்மெண்டில் மொத்தம் 700 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான வளாகம். அது இருந்த பகுதியில் மண்ணின் மைந்தர்கள் அதிகம் போல. எங்கள் வளாகத்திற்கு உள்ளே நிலவும் சூழ்நிலைக்கும், வெளியே இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லை. சென்னையின் எழுதப்படாத விதியான பூர்வக்குடிகள் கூலிவேலை செய்து ஜீவனம் செய்வதும், வந்தேறிகள் சொகுசாக இருப்பதும் கண்கூடாகத் தெரிந்தது. ஏற்கனவே கல்யாணம் ஆனதால் எனது ரொட்டீன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. மேற்கொண்டு வெளியில் எப்போது பார்த்தாலும் நான்கு பேர் குடித்து விட்டோ, இல்லை வேறு எதற்காகவாவது சண்டைபோட்டுகொண்டும், ஆபாசமாக திட்டிக்கொண்டும் ஒரு கலீஜ் சீனை மெயின்டைன் செய்து கொண்டிருந்ததால் சும்மா வெளியில் செல்லும் பழக்கம் கூட நின்றுபோனது.
அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் கனவான்கள் ஆனதால் யாரும் யாருடனும் பேசிக்கொண்டது இல்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முறை என்னை ஒரு முறை காய்கறிக்கடையில் பார்த்தபோது லேசாகப் புன்னகைத்தார். ஆனால் நான் அவரை ஒருமுறை கூட சரியாகப்பார்ததில்லை. அதனால் குழப்பத்தில் சற்று தடுமாறி பின் சுதாரித்து வணக்கம் சொன்னேன். அதற்குள் அவருக்கு கோபம் சுர்ரென்று ஏறிவிட்டது. மேற்கொண்டு முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு போய்விட்டார். அன்று இரவு எனது வீட்டம்மா "ஏங்க அவரு ரொம்ப வருத்தப்பட்டாராங்க..அவங்க பொண்ணு சொல்லிச்சு" என்று சொன்னாள். அதற்கு பின் வேலை பளு, வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியதில் வீடு என்பது கிட்டத்தட்ட தினமும் தங்கும் ஒரு விடுதியைப்போல மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களை தவிர்த்து பார்த்தால் வீடு என்பது இப்போது வெறும் செங்கல், சிமென்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு வஸ்து என்ற அளவிலேயே எண்ணத்தோன்றுகிறது. முன்பு நான் உணர்ந்த என்னவென்று சொல்லத்தெரியாத அந்த பிணைப்பை சமீப காலமாக நான் பெரிதாக உணரவில்லை.
கல்யாணம், குழந்தை பிறப்பு இந்த நிகழ்வுகளுக்குபின் இரண்டு முறை வீடு மாறி இருந்தாலும் பெரிய வருத்தமோ, அசௌகர்யமோதோன்றவில்லை. இரு இரண்டு நாள் வேண்டுமானால் தூக்கம் வர தாமதமாகும்.மற்றபடி பெரிய பிரச்னை ஏதும் இருந்தது இல்லை.ஆனால் செல்லப்போகும் வீடு பற்றிய எதிர்பார்ப்பு மாறி இருப்பதை உணர்கிறேன். முக்கியமாக பாதுகாப்பு, ஏரியாவில் மண்ணின் மைந்தர்கள் நிலவரம் இவற்றைப்பற்றி ஒரு நுண்ணிய விசாரிப்புக்கு பின் எல்லாம் எதிர்பார்த்தபடி இருந்தால் மனம் உடனே ஏற்றுக்கொள்கிறது. உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் எல்லாம் இப்போது தலைதூக்குவது இல்லை. இப்போது இருக்கும் வீடு வசதியாக இல்லை என்று நினைத்தால் உடனே மாற்றிக்கொள்ளும் மனம் வந்து விட்டிருக்கிறது. ஆனால் முன்பு அப்படி இல்லை. சில பல அசௌகர்யம் இருந்தாலும் வீட்டை மாற்றிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கும்.
இன்னும் நான்கு மாதத்திற்குள் மீண்டும் ஒரு முறை வீடு பெயர இருக்கிறோம். ஆனால் இந்த முறை வீடு மாறிய பின்பு குறைந்த பட்சம் இரண்டு வாரமாவது தூக்கம் பிடிக்காது என்று நினைக்கிறேன். வீடு மாறும் முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அனுபவித்த ஒருவித குறுகுறுப்பும், ஒருவித aunxiety யும் இருக்கிறது. மனம் காற்றில் பறக்கிறது. காரணம் இப்போது நாங்கள் பெயரப்போவது புதிதாக வாங்கி இருக்கும் சொந்த வீட்டுக்கு.
உண்மையான சந்தோசம் என்றும் தொடரட்டும்...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
Delete