Saturday, October 26, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

மிஷ்கின் என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு வகை தொகைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பாளியாகத்தான் இருக்கிறார்.

இவருடைய முந்தைய படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் இவை அனைத்திலும் ஒரு பொதுத்தன்மை இருந்தது. இவர் எடுத்துக்கொண்ட கதை களங்களில் சமூகத்திற்கு முக்கியமான எதோ ஒன்றை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு objective இருப்பதாக எனக்கு தோன்றியது.

ஆனால் இதே எதிர்பார்ப்புகளோடு முகமூடி யை அணுக முடியவில்லை. அந்த படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும் என எண்ணுகிறேன்.
கதை களன் மட்டும் அல்ல பாத்திரங்கள் பற்றிய Description கூட முழுமையானதாக இல்லை.
உதாரணமாக நந்தலாலாவில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் முழுமையாக இருக்கும். அதன் அடிப்படையிலேயே பார்வையாளன் மிக நுட்பமான காட்சிகளையும் குறியீடுகள் மூலமாக புரிந்து கொள்ள முடிந்தது.
வசனங்களின் தேவை மிக குறைவே.

ஆனால், முகமூடியின் கதா பாத்திரங்கள் முழுமையானவை அல்ல. கடைசிவரை ஒரு சராசரி பார்வையாளன் மட்டும் அல்ல தீவிர திரை பார்வையாளர்களால் கூட  பாத்திரங்களின் தன்மையை உணர முடியவில்லை. இது பார்வையாளனை படத்துடன் ஒன்ற முடியாத நிலைக்கு தள்ளியது. போதாக்குறைக்கு ஏகப்பட்ட தர்க்கப் பிழைகளும் சேர்த்து ஒரு நல்ல மசாலா படத்திற்கான தகுதியைக்கூட இந்த படம் இழந்து விட்டது.



முதல் மூன்று படங்களின் மூலம்  மாற்று திரைப்படங்களின் முக்கிய விதையாக இருப்பார் என எண்ண வைத்தவர் முகமூடி போன்ற ஒரு படத்தை , கதையை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விதான் மிஷ்கின் பற்றிய எனது புரிதலுக்கு இடையூறாக உள்ளது.

வேறு ஒரு இயக்குனரின் படம் என்றால் முந்தைய படம் ஏற்ப்படுத்திய பாதிப்பின் அடிப்படையிலான முன் முடிவுகளோடுதான் அடுத்த படத்தையும் அணுகியிருப்பேன். ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை மிச்சம் இருந்ததால் ஒரு நேர்மறையான எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க அமர்ந்தேன்.

ஒரு வரியில் சொல்வது என்றால் "சபாஷ் மிஷ்கின்"


படத்தில் பாடல் இல்லை, தனி track ஆகவோ அல்லது படத்தோடு சேர்ந்தோ காமெடி இல்லை. வழக்கமான ஹீரோ, ஹீரோயின் இல்லை. முற்றிலும் புது விதமான கதை சொல்லும் பாணி. எல்லாவற்றிற்கும் மேலாக பார்வையாளனின் கற்பனைக்கும் இடம் கொடுத்து ஒரு படைப்பை உருவாக்குதல் தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதியது.

"ஒரு ஓநாய் ஒரு கரடியிடம் வேலை செய்து வந்தது. கரடி சொல்லும் விலங்குகளை வேட்டையாடுவதுதான் ஓநாயின் வேலை. அப்படி ஒரு நாள் தவறுதலாக ஒரு ஆட்டுக்குட்டியை கொன்று விடுகிறது. 

தனது தவற்றை உணர்ந்து அந்த ஆட்டுக்குட்டியின் வீட்டிற்க்கு செல்லும் ஓநாய் அங்கு ஒரு தாய் ஆடு, தந்தை ஆடு மற்றும் ஒரு குட்டி ஆடு இருப்பதை பார்க்கிறது. அந்த மூன்று ஆடுகளுக்கும் கண் தெரியாது.

 ஓநாய் அப்பா ஆட்டிடம் சென்று உங்களின் குட்டி ஆடு இறந்து விட்டது இனிமேல் நான் உங்களை பார்த்துகொள்கிறேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறது.

அதிலிருந்து ஓநாய் அந்த ஆட்டு குடும்பத்திற்காகவே உழைக்கிறது.
ஆனால் கரடி அதனை மீண்டும் தன வழிக்கு அழைக்கிறது. ஓநாய் மறுக்கிறது.
ஆட்டு குடும்பத்தை அழித்தால்தான் ஓநாயை தன் வழிக்கு கொண்டு வரமுடியும் என்று ஆட்டு குடும்பத்தை துரத்து கிறது. இதை அறிந்த ஓநாய் கரடியைத் தாக்கி காலை உடைக்கிறது.

கரடியின் சொல்லுக்கிணங்க ஓநாயால் தாக்கப்பட்டவர்கள் புலியிடம் புகார் செய்ய புலியும் ஓநாயை துரத்துகிறது.  அடிபட்ட கரடியும் துரத்துகிறது.

புலி மற்றும், கரடியிடம் இருந்து ஓநாய் தப்பியதா? ஆட்டுகுடும்பம் என்ன ஆயிற்று?" இது தான் படத்தின் கதை.

சென்னையின் பின்னிரவில் அரவமில்லாத ஒரு ரோட்டில் ஒருவன் (மிஷ்கின்) துப்பாகியால் சுடப்படுகிறான். நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் அவன் அந்த நேரத்தில் கடந்து போகும்  சராசரி மனிதர்களுக்கு ஒரு சுவராசியமான காட்சி பொருளாக மட்டும் தெரிய ஒரு மருத்துவ கல்லூரி மாணவன் சந்துருவுக்கு (ஸ்ரீ) மட்டும் (இன்னும் மாணவனாக இருப்பதால்) ஒரு உயிராக தெரிகிறான். சரியாக இந்த முதல் காட்சியிலேயே கதை துவங்குகிறது.

அதன் பின் ஸ்ரீ மிஷ்கின்னை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் அதீதமாக புனையப்பட்டு இருந்தாலும் மிக புத்திசாலித்தனமான திரைக்கதையால் மறைக்கப்பட்டு விடுகிறது.

அடிபட்டு கிடக்கும் மிஷ்கினை ஒற்றை ஆளாக பைக்கில் வைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஸ்ரீ அங்கு எதிர்கொள்ளும் சூழ்நிலை அவரை மட்டும் அல்ல நம்மையும் சேர்த்து அதிர வைக்கிறது.
உயிருக்கு போராடும் ஒருவனுக்கு உதவ நினைப்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களை அழுத்தமாக காட்டுகிறார் டைரக்டர் மிஷ்கின். இதில் சில தர்க்கரீதியான கேள்விகள் எழுந்தாலும் திரைக்கதையின் வேகம் அதை அனாயசமாக மறைக்கிறது.

அதன் பின் மிஷ்கினை தனது வீட்டுக்கே கொண்டு சென்று மிகச்சிக்கலான அறுவை சிகிச்சையை தனது professor ன் டெலிபோன் guidance உடன்  செய்து அவரைக் காப்பாற்றிவிடுகிறார். ஆனால் மறுநாள் காலையில் மிஷ்கின் அங்கிருந்து தப்பி விடுகிறார்.

ஸ்ரீ யின் வீட்டை போலிஸ் வந்து தட்டுகிறது. 14 கொலைகள் செய்த wolf என்ற குற்றவாளிக்கு உதவி செய்து உடந்தையாய் இருந்ததற்காக ஸ்ரீ யின் மொத்த குடும்பத்தையும் கைது செய்கிறார்கள்.

wolf உயிரோடோ , பிணமாகவோ பிடித்து கொடுத்தால் மட்டுமே ஸ்ரீ யின் குடும்பத்தை விடுதலை செய்ய முடியும் என போலீஸ் கூறுகிறது.

இந்த நேரத்தில் , தப்பி ஓடிய wolf தன்னை காப்பாற்றிய  சந்துருவை செல் போனில் தொடர்பு கொண்டு அவரை சந்திக்க விரும்புவதாக கூறுகிறார். போலீஸ் சந்துருவின் கையில் துப்பாக்கியை கொடுத்து அனுப்பி விட்டு பின்தொடர்கிறது.

ஒரு ரயில் நிலையத்தில் ஆள் அரவமற்ற நேரத்தில் wolf ஐ  சந்திக்கிறார்.

ஒரு இரவு முழுதும் போராடி தான் காப்பாற்றிய wolf ஐ தானே கொல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால் சந்துரு என்ன செய்தார்? யார் இந்த wolf?
அதன் பின்னணியில் உள்ள முடிச்சு என்ன என்பதற்கு நான் ஒரு மிகப்பெரிய பிளாஷ் பேக்கை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

ஆனால் உச்ச கட்ட ஆச்சர்யம், மிஷ்கின் அந்த முடிச்சை படத்தின் கிளைமாக்ஸ்க்கு சற்று முன்பு ஒரு கல்லறை தோட்டத்தில் இரண்டு மெழுகு வர்திகளுக்கு நடுவில் முகத்தை டைட் க்ளோஸ் அப்பில் வைத்துக்கொண்டு, ஒரு சிறுமிக்கு சொல்லும் கதையில் அவிழ்க்கிறார். அதுவும் பழைய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையை உவமானமாக வைத்து குழந்தைக்கு சொல்லும் கதையாகவே சொல்கிறார். காட்சிகளை பார்வையாளனின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார். மிக அற்புதமான யுக்தி.

ஓநாய் கொல்லப்பட்டு விடக்கூடாது என்ற பதைபதைப்பை பார்வையாளனிடம் ஏற்படுத்துவதில் மிஷ்கின் நிச்சயமாக ஜெயித்து இருக்கிறார்.

நடிகர்கள் தேர்விலும் கச்சிதம். 

ஸ்ரீ அபாரமான நடிப்பை வெளிப்படித்தி இருக்கிறார். எந்த இடத்திலும் அதீதமோ இல்லை போதாமையோ இல்லை. கச்சிதம்.

மிஷ்கின் wolf வேடத்தை தானே செய்வதாக எடுத்த முடிவு ஆகச்சிறந்தது என்று எண்ணுகிறேன். அற்புதமான உடல்மொழியுடன் நியாயமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அதுவும் அந்த கிளைமாக்ஸ் கல்லறை தோட்டத்தில் குழந்தைக்கு கதை சொல்லும் நீண்ட காட்சியில் உச்சம் தொட்டிருக்கிறார் என்றே சொல்வேன்.

படத்தில் சொற்ப நேரங்களே வரும் சின்ன சின்ன கதா பாத்திரங்கள் கூட மொத்த கதையை உள்வாங்கி தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக திருநங்கை க்ளாடியா, பிச்சைகாரன், போலீஸ்காரர்களாக வரும் நடிகர்கள், professor இன்னும் எல்லோருமே...

ஜூனியர் ரங்கா வின் ஒளிப்பதிவு கதையை மீறாத கலை க்கு சிறந்த உதாரணம். சென்னையின் இரவு நேர தெருக்களை கண் முன் நிரித்துவது மட்டும் இல்லை ஒரு த்ரில்லர் படத்தின் ஒட்டு மொத்த மூடை பார்வையாளனின் மனதில் உருவாக்குகிறார். பிரமாதமான ஒளிப்பதிவு.

இளையராஜா - இந்த மகத்தான கலைஞனை என்ன சொல்லி புகழ்வது என்று தெரியவில்லை. மிஷ்கின் மிகச்சரியான மரியாதையை அளித்திருக்கிறார்.
டைட்டில் கார்டில் இடம்பெறும் ஒரே பெயர் " முன்னணி இசைக்கோர்ப்பு- இளையராஜா" என்பது மட்டும் தான்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தன இசையால் கதை சொல்லி இருக்கிறார். ஒரு த்ரில்லர் படத்தினை நம் மனதிற்கு நெருக்கமான முதல் தர படைப்பாக மாற்றியது ராஜாவின் இசை தான் என்று அடித்து சொல்லாம்.

வாழ்க இசைஞானி.

மொத்தத்தில் இந்த படத்தின் பாதிப்பு இன்னும் சில வாரங்களாவது என்னுடன் இருக்கும் என்பது நிச்சயம். 

A must see movie for sure....





No comments:

Post a Comment