Tuesday, December 2, 2014

புது மனை புகும் விழா - சாப்பாட்டு சமாச்சாரம்

      நவம்பர் 9 ஆம் தேதி கிருஹப்பிரவேசம் செய்து விட்டோம். ஒரு கல்யாணத்திற்கு சற்றும் குறைவில்லாத மகிழ்ச்சியும், பரபரப்பும் இருந்தது உண்மை. ஆனால் ஒரே ஒரு வருத்தம், சாப்பாடு விஷயம் ஒரு "Mega Flop". மற்ற எல்லா சடங்குகளும் நிறைவாக இருந்தாலும் சாப்பாடு சரி இல்லாமல் போனதில் மனம் மிகவும் சங்கடப்பட்டுப் போனது.
     வழக்கமாக நான் மிகவும் கவனமாக இருக்கும் விஷயம். இந்த முறை நட்பின் காரணமாக சறுக்கி விட்டேன். எனது நண்பர் ஒருவர்தான் சாப்பாடு சப்ளை செய்தார். ஒரு மாதத்திற்கு முன்பு நான் விஷேசத்திற்கு அழைப்பதற்காக தொலைபேசியில் கூப்பிட்டபோதே சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட அன்பு கட்டளைதான். நானும் வேறு யாரையோ அமர்த்துவதற்கு பதில் நம் பின்னணி தெரிந்த (வீட்டில் எல்லோருக்கும் நாக்கு நான்கு அடி நீளம்) ஒருவரால் சிறப்பாக செய்ய முடியும் என்று நினைத்தேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இவ்வளவுக்கும் நான் எந்த பேரமும் செய்ய நினைக்க கூட இல்லை. சமையல் பிரமாதமாய் இருக்க வேண்டும், பட்ஜெட் பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கறாராய் சொல்லி இருந்தேன்.
     முதல் நாளே சுற்றமும், நட்புகளும் வரத்தொடங்கி விட்டனர். உண்மையிலேயே நான் அத்தனை பேரை எதிர்பார்க்கவில்லை. ஒருவழியாக அனைவரும் தங்க, தூங்க, சாப்பிட ஏற்பாடு செய்து விட்டு மறுநாள் நடக்கப்போகும் விழா ஏற்பாடுகளை மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தேன். இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால் புது வீட்டிலேயே தங்கி விட்டேன். வந்த விருந்தினர்கள் அனைவரும் இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டிலும், என் தம்பியின் வீட்டிலும் இருந்தார்கள்.
     மறுநாள் அதிகாலை பிரம்ஹ முஹூர்த்ததில் தான் ஹோமம் என்பதால் அனைவருக்கும் கார்கள் ஏற்பாடு செய்து புது வீட்டிற்கு அழைத்து வரும் ஒருங்கிணைப்பு பணியை என் தம்பியும், மனைவியும் எடுத்துக்கொண்டார்கள்.
ஹோமம்
      9ஆம் தேதி அதிகாலை எல்லாம் கச்சிதமாக நடந்தது. பூஜை, புனஷ்காரங்கள் எல்லாம் முடிந்து பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடிக்க காலை எட்டு மணி ஆகிவிட்டது. பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது. சாப்பிட பந்திக்கு சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது பாவம் இந்த மக்கள் என்று.
      அந்த பசியிலும் கூட தொண்டையில் இறங்க மறுத்தது அந்த இட்லியும், பொங்கலும்.
பூரி மட்டுமே சுமார் என்ற அளவுக்கு இருந்தது.சமையல்நண்பருக்கு கால் செய்து விஷயத்தை சொன்னேன். அவர் வேறொரு பெரிய வீட்டு விசேஷத்தில் மாட்டிக் கொண்டதால் தன்னால் வர முடியவில்லை என்றும் தனது மேனேஜரிடம் தான் பேசுவதாகவும் நடந்தவைகளுக்கு வருந்துவதாகவும் கூறினார்,  வந்திருந்த அனைவரிடமும் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்னிப்புதான்  கேட்டிருக்க வேண்டும். இருந்தாலும் எனது சொந்தங்கள் என்னைக் கைவிடவில்லை. இருந்ததை சாப்பிட்டுக் கொண்டார்கள்.
    சரி இதுதான் தொலைந்து போகட்டும். மதியச்சாப்பாட்டுக்கும் இவனை நம்பி மோசம் போகவேண்டாம் என்று அப்போதாவது தோன்றி இருக்க வேண்டும். என்ன செய்வது? எனது விதி (வந்த விருந்தினர்களின் விதியும் தான்) வலியதாக இருந்திருக்கிறதே. கேட்டரிங் மேனேஜரை கூப்பிட்டு "இங்கே பாருங்க காலைல எவ்ளோ கஷ்டம் ஆகிடிச்சுன்னு நீங்களே பாத்தீங்க. மதியம் சாப்பாடு இந்த கெட்ட பேரை மாத்துற மாறி இருக்கணும்" என்று எச்சரித்து மட்டும் அனுப்பினேன். இது ஒரு குற்றமாயா?
     அதுக்கு வெச்சான் பாரு ஆப்பு. மதியம் 12 மணிக்கே எல்லோருக்கும் பசிக்க ஆரம்பித்து விட்டது. ஆளாளுக்கு மாப்ளே சாப்பாடு எப்போ வரும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நான் மதியம் 12:00 க்கு கண்டிப்பாக வந்து விடுமாறு முன்பே சொல்லி இருந்தேன். மொபைலில் அழைத்து கேட்ட பொழுது வந்து கொண்டே இருப்பதாகவும் இன்னும் 10 நிமிடத்தில் அங்கு இருப்போம் என்றும் பதில் வந்தது. 1 மணி ஆயிற்று 1:30 ஆயிற்று வந்த பாடு இல்லை. இங்கு ஜனங்கள் கொதித்து கிடந்தார்கள். இதில் முக்கியமான விஷயம் இந்த வீடு ஒரு ஒதுக்கு புறத்தில் அமைந்த "GATED COMMUNITY". ஆகையால் சட்டென்று மாற்று ஏற்பாடு செய்யவோ, இல்லை ஒரு Hotel க்கு கூப்பிட்டு செல்லவோ வாய்ப்பு இல்லை. கார் இருந்தால்தான் பிரதான சாலையில் இருந்து இந்த இடத்துக்கே வர முடியும்.
     இந்த பின்னணியில் நடந்த சம்பவங்களை கற்பனை செய்து பாருங்கள். மதியம் மணி 2:30, சரி ஆனது ஆகட்டும் என்று சில பல கார்களை எடுத்துக் கொண்டு சிறு குழுக்களாக ஏதேனும் உணவகத்திற்காவது அழைத்து செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான ஏற்பாட்டை செய்து வெளியேறும் வேளையில் வந்து சேர்ந்ததைய்யா நம்ம சோத்து வண்டி. எனக்கு கண் மண் தெரியாத கோபம்... ஆனாலும் முதன் முதலாக வீட்டில் காலடி எடுத்து வைக்கும் நேரம் எதிர்மறையாக எதுவும் நடந்து விட வேண்டாம் என்று அடக்கிக் கொண்டேன். எல்லோரும் என்னன்னவோ பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இனிமேல் உணவகங்களிலும் சாப்பாடு இருக்குமா? அதுவும் இத்தனை பேருக்கு? என்ற சந்தேகம் தலை தூக்க இப்போது வந்த உணவையே உண்பது என்று ஒரு வழியாக சமாதானம் ஆனேன்.
     ஆனால் அந்த பாவி காலையில் கொடுத்த இட்லி, பொங்கல் மேல் இருந்த வெறுப்பை மதியாச்சாப்பாட்டைக் கொடுத்து மொத்தமாக போக்கி விட்டான். பின்னே பள்ளிக்கூட சத்துணவின் சுவை தோத்தது போங்கள். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக உண்டுவிட்டு எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
அதன் பின் அந்த சமையல் நண்பர் என் கண்ணில் மாட்டவில்லை. பணம் வாங்கி கொள்ள சொல்லி அழைத்தாலும் போனை எடுப்பது இல்லை.
 


Wednesday, July 16, 2014

வீடு பெயர்தல்

     ரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு குடி போவதைத்தான் வீடு பெயர்தல் என்கிறேன்.இந்த வார்த்தைப் பிரயோகம் சரிதானா என்று தெரியவில்லை. தர்க்க ரீதியாக சரி என்றுதான் படுகிறது.இருக்கட்டும்.
     இந்த 36 ஆண்டுகால வாழ்க்கையில் பலமுறை வீடு பெயர்ந்தாகிவிட்டது. சரியாக 10 வயதாகும்போது முதல்முறையாக வேறு வீட்டிற்கு போகவேண்டியிருந்தது. அதுவும் மிக விநோதமாக வீட்டைக்காலி செய்துவிட்டு எனது பெற்றோர்கள் ஒரு வீட்டுக்கும் நான், எனது தங்கை மற்றும் தம்பி வேறோர் வீட்டிற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை. ஊரில் விவசாயம் பொய்த்து விட்டதால் வீடு, நிலம் அனைத்தையும் அப்படியே விட்டு விட்டு, மாடு கன்றுகளை விற்றுவிட்டு அப்பாவும், அம்மாவும் பிழைப்பு தேடி கேரளாவுக்கு பஸ் ஏறினார்கள். எங்களை பக்கத்து ஊரில் பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்த பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினார்கள். பாட்டியும் தாத்தாவும் அதே பள்ளியில் வாத்தியார்கள்...
     அந்த சூழ்நிலையில் என் மன நிலை எப்படி இருந்தது என்பது எனக்கு இன்னும் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. எதுவும் ஒட்டவில்லை. யாரைப்பார்த்தாலும் கோவம் கோவமாக வந்தது. பாட்டி, தாத்தா செல்லம் கொடுக்கும் ஜாதி எல்லாம் இல்லை. பள்ளியிலேயும் சரி வீட்டிலும் சரி "வாத்தியார்களாக" மட்டுமே இருந்தார்கள். அப்பாவை நினைத்தாலே பெரும் சினமாய் இருந்தது. ஆனால் இன்று எண்ணிப்பார்க்கும்போது, எனது அப்பா அன்றைய தினங்களில் மனதளவில் எவ்வளவு நொறுங்கிப்போய் இருந்திருப்பார் என்று புரிகிறது. சொந்த ஊரில் முதலாளியாக, நான்கு குடும்பத்திற்கு படியளப்பவராக இருந்து விட்டு வேறோரிடத்தில் பஞ்சம் பிழைக்க கூலியாளாகச் செல்ல பெரும் மனத்திடம் வேண்டும். எங்கள் எதிர்காலம் நிமித்தமே அதனை தைரியமாக செய்தார் என்பது பிற்பாடு புரிந்தது.
     ஆனால் எனது இந்த மனக்கிலேசம் எல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம்தான். வெகு இயல்பாய் புது இடத்தையும் சூழலையும் மனம் ஏற்றுக் கொண்டது. புது நண்பர்கள், எங்கள் ஊரில் நாங்கள் விளையாடியதைதவிர பல புதிய விளையாட்டுகள் என்று ஜாலி ஆகிவிட்டேன். ஆனால் இரவு நேரங்களில் மட்டும் ஒரு இனம்புரியாத தனிமையை உணர்ந்த ஞாபகம். அனேகமாக பால்ய காலத்தில் இருந்து பழகிய நண்பர்களை பற்றிய எண்ணமா? இல்லை எங்கள் வீட்டிற்கே இருந்த பிரத்யேக வாசனை இல்லாமல் வேறு ஏதோ வாசம் கொண்ட பாட்டியின் வீடா? என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. ஏறக்குறைய 1 வருடம் கழித்து எங்கள் ஊருக்கு சும்மா 2 நாள் விடுமுறைக்கு சென்ற போது மனதில் ஏதோதோ ஒரு குறுகுறுப்பு. ஊரில் போய் இறங்கியவுடன் சும்மா பேருக்கு கொஞ்ச நேரம் வீட்டில் இருந்துவிட்டு, உடனே வெளியில் பாய்ந்து ஓடினேன். நண்பர்களைத் தேடித்தான். பயபுள்ளைகள் ஒருவனையும் காணோம். மிகுந்த ஏமாற்றத்திற்கு பின்பு இரண்டொருவனைப்பார்தேன். அவர்களோ பெரிதாக எந்த பரபரப்பும் இல்லாமல் என்னை எதிர்கொண்டதில் எனக்கு எப்போடா இங்கிருந்து கிளம்புவது என்று ஆகிவிட்டது. அதற்கு பின் எங்கள் சொந்த ஊரில் நீண்ட நாள்கள் தாங்கும் வாய்ப்பு அமையவில்லை.
     என் மொத்த வாழ்நாளில் பெரும்பான்மை காலம் சென்னையிலேயே கழிந்து விட்டதால், (இனிமேலும் கழியப்போவதால்) சென்னையே என் பிறந்த ஊர் போன்ற உணர்வு வந்து விட்டது.
இங்கு வந்த பின்பும் பல முறை சட்டி தூக்கியாகிவிட்டது. பேச்சிலராக இருந்தபோது கூட ஒவ்வொரு அறைக்கும் ஒரு வாசம் இருந்ததை நான் உணர்ந்திருக்கிறேன். அந்த நுண்ணிய வாசமே வேறொரு வீட்டிற்கு மாற்றிகொண்டு செல்லும்போது படுத்தும். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காவது சரியாகத் தூக்கம் பிடிக்காது. வாசம் மட்டும் அல்லாது சில பழகிய சத்தங்கள், எப்போதும் எங்கிருந்தாவது கேட்டு கொண்டிருக்கும் பாட்டு, பழுதடைந்த பழைய மின்விசிறி எழுப்பும் ஒலி, டீக்கடைக்கென்றே ஸ்பெசலாக தயாரிக்கப்படும் ஸ்டவ் கிளப்பும் ஓசை, குறிப்பிட்ட நேரங்களில் அங்கு போடப்படும் வடை மற்றும் பலகாரங்களின் அடைந்து கிடக்கும் மணம் போன்றவைகள் ஒரு படிமமாக மனதிற்குள் புதைந்து விடுகின்றன. இது போன்ற சுற்றுப்புற காரணிகளின் அடிப்படையிலேயே நமது தினசரி நடவடிக்கைகளில் சில அமைந்து விடுகின்றன. உதாரணமாக வாடிக்கையாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு டீக்கடை/மெஸ் வரை சென்று டாப் அடிப்பது, இல்லை பக்கத்து வீட்டில் சென்று அரட்டை அடிப்பது போன்றவையை நாம் வழக்கப் படுத்தி கொண்டிருப்போம். வீடு பெயர்தலின்போது இவை அனைத்தும் திடீரென தடைபடுவதோ அல்லது வரிசை மாற்றி வழக்கப்படுத்தும் போதோ மனம் அசௌகரியப்படுகிறது.
     கல்யாணத்திற்கு முன்பு தனியாளாக ஒரு வீட்டை விட்டு மற்றொரு வீட்டுக்கு மாறிச் சென்றது இல்லை. மொத்தமாக அதே நண்பர்களுடன் கும்பலாகத்தான் வீட்டை மாற்றிக்கொள்வோம். அப்போதும் கூட குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு கிர்ர் என்றுதான் இருக்கும். குறிப்பாக அருகில் ஏதாவது ஒரு டீக்கடைக்காரருடன் பழக்கம் வைத்துக்கொள்வது வரையாவது அந்த இடம் அன்னியமாகவே தோன்றும். நண்பர்களுடன் தங்கிய போது வீடு பெயர நேர்ந்தால் நாங்கள் முதலில் தேடுவது ஏதாவது மெஸ் அருகில் இருக்கிறதா என்பதுதான். நாங்கள் பெரும்பாலும் ஆள் வைத்து சமைத்துதான் சாப்பிட்டோம் என்றாலும், மாலை நேரங்களில் டாப்படிக்க மெஸ் தான் வசதி. கொறிக்க ஏதாவது வாங்கிக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்து கொள்ளலாம். மெஸ் ஓனருக்கு நமது பெயர் ஞாபகத்தில் நிற்க ஆரம்பித்துவிட்டது என்றால் நாம் அந்த ஏரியா வாசியாக மாறிவிட்டோம் என்று பொருள். கொஞ்சம் பழகி விட்டால் போதும், மெஸ் பிசியாக இருக்கும் நேரங்களில் ஓனர் நம்மை கல்லாவை கவனித்து கொள்ளுமாறு பணிவோடு சொல்லி விட்டு சப்ளையில் மும்முரமாகி விடுவது கூட உண்டு. இன்னொரு வினோதமான விஷயத்தையும் கவனித்திருக்கிறேன். ஏரியாவில் நாம் எப்போதுமே சென்றிருக்காத மளிகை கடைகள், மெடிக்கல் ஷாப்கள், ஹார்ட்வேர், எலெக்ட்ரிகல் , அடகுக்கடைக்காரர்கள் கூட நம்மை எங்காவது பார்த்தால் புன்னகைப்பார்கள். இதெல்லாம் என் பிரக்ஞையில் இருந்தது கல்யாணம் ஆகும் வரைதான்.
     கல்யாணத்திற்கு பின் புதிதாக வேறு ஒரு ஏரியாவிற்கு மாறினோம். பெரிய வீடு. அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் கூட்டுகுடும்பமாக இருப்பது என்று திட்டம். அதற்காக 3 BHK கொண்ட பெரிய வீடு.அந்த அபார்ட்மெண்டில் மொத்தம் 700 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான வளாகம். அது இருந்த பகுதியில் மண்ணின் மைந்தர்கள் அதிகம் போல. எங்கள் வளாகத்திற்கு உள்ளே நிலவும் சூழ்நிலைக்கும், வெளியே இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லை. சென்னையின் எழுதப்படாத விதியான பூர்வக்குடிகள் கூலிவேலை செய்து ஜீவனம் செய்வதும், வந்தேறிகள் சொகுசாக இருப்பதும் கண்கூடாகத் தெரிந்தது. ஏற்கனவே கல்யாணம் ஆனதால் எனது ரொட்டீன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. மேற்கொண்டு வெளியில் எப்போது பார்த்தாலும் நான்கு பேர் குடித்து விட்டோ, இல்லை வேறு எதற்காகவாவது சண்டைபோட்டுகொண்டும், ஆபாசமாக திட்டிக்கொண்டும் ஒரு கலீஜ் சீனை மெயின்டைன் செய்து கொண்டிருந்ததால் சும்மா வெளியில் செல்லும் பழக்கம் கூட நின்றுபோனது.
     அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் கனவான்கள் ஆனதால் யாரும் யாருடனும் பேசிக்கொண்டது இல்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு முறை என்னை  ஒரு முறை காய்கறிக்கடையில் பார்த்தபோது லேசாகப் புன்னகைத்தார். ஆனால் நான் அவரை ஒருமுறை கூட சரியாகப்பார்ததில்லை. அதனால் குழப்பத்தில் சற்று தடுமாறி பின் சுதாரித்து வணக்கம் சொன்னேன். அதற்குள் அவருக்கு கோபம் சுர்ரென்று ஏறிவிட்டது. மேற்கொண்டு முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு போய்விட்டார். அன்று இரவு எனது வீட்டம்மா "ஏங்க அவரு ரொம்ப வருத்தப்பட்டாராங்க..அவங்க பொண்ணு சொல்லிச்சு" என்று சொன்னாள். அதற்கு பின் வேலை பளு, வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றியதில் வீடு என்பது கிட்டத்தட்ட தினமும் தங்கும் ஒரு விடுதியைப்போல மாறிக்கொண்டே வந்திருக்கிறது. மனிதர்களை தவிர்த்து பார்த்தால் வீடு என்பது இப்போது வெறும் செங்கல், சிமென்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு வஸ்து என்ற அளவிலேயே எண்ணத்தோன்றுகிறது. முன்பு நான் உணர்ந்த என்னவென்று சொல்லத்தெரியாத அந்த பிணைப்பை சமீப காலமாக நான் பெரிதாக உணரவில்லை.
     கல்யாணம், குழந்தை பிறப்பு இந்த நிகழ்வுகளுக்குபின் இரண்டு முறை வீடு மாறி இருந்தாலும் பெரிய வருத்தமோ, அசௌகர்யமோதோன்றவில்லை. இரு இரண்டு நாள் வேண்டுமானால் தூக்கம் வர தாமதமாகும்.மற்றபடி பெரிய பிரச்னை ஏதும் இருந்தது இல்லை.ஆனால் செல்லப்போகும் வீடு பற்றிய எதிர்பார்ப்பு மாறி இருப்பதை உணர்கிறேன். முக்கியமாக பாதுகாப்பு, ஏரியாவில் மண்ணின் மைந்தர்கள் நிலவரம் இவற்றைப்பற்றி ஒரு நுண்ணிய விசாரிப்புக்கு பின் எல்லாம் எதிர்பார்த்தபடி இருந்தால் மனம் உடனே ஏற்றுக்கொள்கிறது. உணர்வுப்பூர்வமான பிரச்னைகள் எல்லாம் இப்போது தலைதூக்குவது இல்லை. இப்போது இருக்கும் வீடு வசதியாக இல்லை என்று நினைத்தால் உடனே மாற்றிக்கொள்ளும் மனம் வந்து விட்டிருக்கிறது. ஆனால் முன்பு அப்படி இல்லை. சில பல அசௌகர்யம் இருந்தாலும் வீட்டை மாற்றிக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கும்.
     இன்னும் நான்கு மாதத்திற்குள் மீண்டும் ஒரு முறை வீடு பெயர இருக்கிறோம். ஆனால் இந்த முறை வீடு மாறிய பின்பு குறைந்த பட்சம் இரண்டு வாரமாவது தூக்கம் பிடிக்காது என்று நினைக்கிறேன். வீடு மாறும் முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அனுபவித்த ஒருவித குறுகுறுப்பும், ஒருவித aunxiety யும் இருக்கிறது. மனம் காற்றில் பறக்கிறது. காரணம் இப்போது நாங்கள் பெயரப்போவது புதிதாக வாங்கி இருக்கும் சொந்த வீட்டுக்கு.

Monday, July 14, 2014

சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சிருக்கியா?

     சென்னைக்கு வந்து 20 வருடங்கள் முழுமையாகக் கடந்து விட்டது. கல்லூரியில் 3 வருடங்கள் விடுதியில் இருந்தது தவிர்த்து 17 வருடங்கள் வாடகை வீட்டில்தான் வாசம். அதிலும் முதல் 7 வருடங்கள் நண்பர்களுடன் flat எடுத்து வாடகையை பகிர்ந்துகொண்டேன். உடனே உங்களுக்கு திருவல்லிக்கேணி பாழடைந்த மேன்சன் எல்லாம் ஞாபகத்திற்கு வரக்கூடாது.பெயர்தான் பேச்சிலர் ரூம். மற்றபடி, பெசென்ட் நகர் மெய்ன் ரோட்டில் 750 ச.அ யில் வசதியான ஹால்,குளியல் அறை,சமையல் அறையுடன்.,சமைக்க, துவைக்க தனியாக ஆள் போட்டு சகல சம்பத்துகளுடந்தான் இருந்தோம். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. அந்த 7 வருடங்களும் பிரச்னை இல்லாமல் குப்பை கொட்ட முக்கிய காரணம் அரை நண்பர்களின் easy going policy தான்.
     நாங்கள் மொத்தம் 6 பேர் இருந்தோம். பெரும்பாலும் ஒரே பகுதியில் இருந்து வந்தவர்கள் (தேனி மாவட்டம்). கல்லூரி காலத்தில் இருந்தே குரூப் சேர்ந்துவிட்டோம். அது மிக வசதியாகப் போய் விட்டது. அது மட்டும் இல்லாமல், சோற்றுக்கு ஜிங்கு ச்சா அடிக்கும் நிலையில் யாரும் இல்லை. இரண்டு பேர் அண்ணா பல்கலைக் கழகத்தில் பகுதிநேர பி.டெக் கை முழு நேரமாக படித்து வந்தார்கள்.அவர்களுக்கு வீட்டில் இருந்து நிதி உதவி வந்து கொண்டு இருந்ததால் பிரச்னை இல்லை. மற்றவர்கள் ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சிறிய வேலைகளிலாவது தொத்திக்கொண்டு இருந்தோம். பெரிதாக இல்லை என்றாலும் நிலையான வருமானம் இருந்தது. ஆகையால் இந்த கூடிவாழும் கான்செப்ட் எங்கள் அளவில் வெற்றிகரமாகவே செயல்பட்டது. மொத்தம் 1500 ரூபாய் கொடுத்து விட்டால் போதும், வாடகை, சாப்பாடு, துணி துவைத்து அயர்ன் செய்வது தவிர வாரம் ஒருமுறை சினிமா, ஞாயிற்றுக்கிழமை 2 பீர் வரைக்கும் அறை கணக்கிலேயே முடிந்து விடும். ஒட்டுமொத்த கணக்கு வழக்கு, நிர்வாகம், வேலைக்காரிகளை கண்காணித்தல், மளிகை சாமான்கள் வாங்குதல் போன்றவை எல்லாம் பகுதி நேர படிப்பாளிகள் பார்த்துக்கொள்வர்கள். மாதமானால் நம் பங்கு ஈவுத்தொகையை அவர்களிடம் கொடுப்பது மட்டும் நம் பொறுப்பு.  
    இடியே விழுந்தது போன்ற பிரச்னைகள் கூட "விட்றா! விட்றா!! எப்பிடிப்பாத்தாலும் நம்ம பய" என்ற வடிவேலுவின் வசனத்தால் ஓரம்கட்டப்படும். அனைவரின் குடும்ப அங்கத்தினர்களும் எங்கள் எல்லோருக்கும் பரிச்சயம், ஆகையால் சிலசமயம் பெரிதாக ஏதேனும் சண்டை வந்து யாருடனாவது பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டால் ஏதாவது ஒருவரின் வீட்டு பெரிசு பஞ்சாயத்திற்கு வந்துவிடும். மற்ற அரை நண்பர்கள் ஒரு சொம்பு நிறைய நீருடனும், ஒரு அட்டைபெட்டி நிறைய பீருடனும் தயாராக இருப்பார்கள்.
     பஞ்சாயத்து தீர்ப்பு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
" எலேய் கேனப்பயளுகளா ஊரு விட்டு ஊரு 500 கல் தாண்டி வந்து இருக்கீக... ஒழுங்கு மருவாதியா ஒருத்தனுக்கு ஒருத்தன் ஒத்தாசையா இருந்து பலகுங்கடா.. உங்க அப்பனுங்க எல்லாம் என்னா பெரிய கப்பல் செட்டிகளா?. ஏய் மாப்புள ஒனக்குலாம் என்னய்யா ஆச்சு? ஒன்கப்பன்லாம் எப்டியாகொந்த ஆளு? நீ அப்பிடி இருக்க வேணாமா? ஒன்னையெல்லாம் எம்புட்டு வெவரமான ஆளுண்டு நெனச்சிக்கிருக்கம்.. இப்பிடி சிறுபுள்ளத்தனமா இருக்கே" என்று கொத்தி விட்டு போவார்கள். அதற்குப்பிறகு அன்று இரவே சண்டை முடிவுக்கு வரும்.
உண்மையில் பிரச்னையை தீர்க்கும் வல்லமை அந்த பஞ்சாயத்துக்கு இல்லை என்றாலும் அதற்கப்புறம் வரும் Dr.OLD MONK அல்லது, Teacher's மிக கச்சிதமாக முடித்து வைப்பார்கள்.
    ஒருநாள் கூட காசில்லாமலோ, பசி பட்டினி என்பதையோ பார்த்தது கிடையாது. நான் ஒரு நான்கு வருடம் கழித்து வேலையை விட வேண்டியது வந்தது. அதுவரை தடையில்லாமல் வந்து கொண்டிருந்த வருமானம் திடீரென்று நின்று போகவும் கொஞ்சம் கலங்கித்தான் போனேன். ஆனால் எனது கூட்டம் என்னை கைவிடவில்லை. உண்பதற்கும், உறங்குவதற்கும் உத்திரவாதம் இருந்ததால் அடுத்து ஒரு வேலையை தேடிக்கொள்ள எனக்கு அதிக நாள் தேவைப்படவில்லை. முந்தையதை விட நல்லதொரு வேலை நான் விரும்பிய Automotive துறையிலேயே அமைந்தது. நிற்க.
     இதையெல்லாம் இப்போது ஏன் சொல்லுகிறேன்?
நான் இப்போது ஒரு நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக இருக்கிறேன். எனக்கு கீழ் ஒரு 120 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அனைவரும் ITI அல்லது +2 முடித்து விட்டு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வேலையில் இருக்கிறார்கள்.பெரும்பாலும் வெளியூர் ஆட்கள் , 21 வயதுக்கு உட்பட்டவர்கள். திருமணம் ஆனவர்கள் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.குறைந்த பட்சம் மாதம் 9௦௦௦ முதல் 12௦௦௦ வரை சம்பாதிக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கம்பெனியே தருகிறது. வந்து செல்ல கம்பெனி பஸ் இருக்கிறது. இது தவிர்த்து வேறு சில அலவன்ஸ் களும் கிடைக்கிறது. ஆனாலும் 20 தேதிகளுக்கு மேல் தயங்கி தயங்கி வந்து சார் ஒரு 1௦௦௦ ரூபாய் வேணும் சார் ரொம்ப அர்ஜென்ட் என்பார்கள். நான் இது மாதிரி நேரங்களில் ரொம்ப கேள்வி கேட்பதில்லை. கையில் இருந்தால் கொடுத்து விடுவேன்.
     ஆனால் காலப்போக்கில் ஒருவர் கேட்டது போய் பலரும் கேட்க ஆரம்பித்தார்கள், அதிலும் ஒரு சுழற்சி முறையை அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு ஒருமாதம் ஒரு 10 பேர் அதற்க்கு அடுத்த மாதம் அடுத்த 10 பேர் என்று மாற்றிக்கொள்வதை நான் உணர ஆரம்பித்தேன். என்னை "ரொம்ப நல்லவன்"னு சொல்லிட்டாய்ங்க போல. ஆனால் நான் கொஞ்சம் கடுப்பாகி விட்டேன். போன மாதம் கடைசியில் வந்த கும்பலிடம் கேட்டுவிட்டேன். எல்லோரும் தனித்தனியாக சொன்னாலும் பதில் பெரும்பாலும் ஒன்றுதான்.
                 "வாங்குற சம்பளம் எங்க சார் பத்துது? வாய்க்கும் வகுத்துக்குமே பத்தலை.எங்களை என்ன பண்ண சொல்றீங்க?"
இந்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ஒருவேளை குடும்பத்துக்கு ஏதேனும் தருகிறார்களா என விசாரித்தபோது அவர்கள் என்னை கடுப்போடு பார்த்து மேலே சொன்ன பதிலை ரிபீட் செய்தார்கள்.
இப்போது நான் கொஞ்சம் சீரியஸ் ஆக விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன். வாங்குற சம்பளத்துக்கு என்னய்யா செலவு என்று கேட்கவும் சார் ரூம் வாடகை மட்டும் 3000. அப்புறம் மெஸ் செலவு மாசத்துக்கு 2000 வரைக்கும். அப்புறம் வாரம் ஒருதடவை வெளியே போவோம் சார் அன்னிக்கி எப்படியும் 1000 வரைக்கும் செலவு ஆகிடும். வேற என்ன சார் மிஞ்சும்? வீட்டுக்கு எங்க அப்பா எப்பிடியும் ஒரு 1000 வரை கேப்பார் . அதுக்குதான் உங்க கிட்ட கடன் கேக்குறோம் சார். என்று சொன்னார்கள். இதில் முக்கியமான ஒன்று இவர்கள் பெரும்பாலும் தனி அறைகளிலோ அல்லது இரண்டு பேர் படுத்துக்கொள்ளமட்டும் முடிகிற மான்சன் களிலோ தான் தங்குகின்றனர். சமைத்து சாப்பிடும் கன்செப்ட் இல்லை. மெஸ்களிலோ , ஹோட்டலிலோ தான் சாப்பிடுகின்றனர். வருமானத்திர்கேற்ப செலவு என்பதெல்லாம் பழங்கதை. அனைவருமே 40000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் வைத்திருக்கிறார்கள். திட்டமிடல் என்பது சுத்தமாக இல்லை.
      இதே கதைதான் திருவல்லிக்கேணியை நிறைத்து வைத்திருக்கும் வேலையில்லாபட்டதாரிகள் நிலையும். இன்றைய சூழ்நிலையில் ரூ.5000 சம்பளத்தில் ஒரு வேலை வாங்குவது பெரிய கொம்பு ஒன்றும் கிடையாது. கண்டிப்பாக யார் வேண்டும் என்றாலும் வாங்க முடியும். ஆனால் வெட்டியாக, பசித்த வயிற்ரை தடவிக்கொண்டு, மோட்டுவளையை பார்த்தபடி படித்திருப்போமே தவிர சேல்ஸ் மேன்வேலையெல்லாம் பார்க்க மாட்டேன் என்று இருப்பவர்கள் அநேகம் பேர். இவர்கள் எல்லாம் முன்மண்டை முடியெல்லாம் உதிர்ந்து அரைக்கிழம் ஆனாலும் கூட உருப்படாமல் கொண்ட கொள்கை மாறாமல் அப்படியே இருப்பது உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. காலப்போக்கில் இவர்கள் வேலை தேடுவதை எல்லாம் விட்டுவிட்டு யாரையாவது அண்டிப்பிழைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்க்கு பழகிய பின் உடம்பு, மனது எதுவும் வளைவது இல்லை. ஆனால் இவர்கள் தங்களுக்குள் ஒரு கழிவிரக்கத்தை செயற்கையாய் வளர்த்துக்கொள்கிறார்கள். உலகம் நம்மை கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள். யாராவது நல்ல எண்ணத்தோடு எதாவது சொல்லப்போனால்
         "ஒனக்கெல்லாம் என்னா தெரியும்? ஒரு நாளாவது சிங்கிள் டீக்கு சிங்கி அடிச்சிருக்கியா? கையிலே காலணா இல்லாம இருந்திருக்கியா?" என்று தளபதி ரஜினியின் டையலாக் பேசுவார்கள்.
இவர்களுக்கும் சரி, என் கம்பெனி மக்களுக்கும் சரி இந்த பதிவின் முதல் இரண்டு பாராக்கள் சமர்ப்பணம். 2001~2004 களில் 1500 ~ 2500 ரூபாய்களில் சாத்தியமான விஷயம் இன்று 5000~7500 ரூபாய்களில் முடியும். அதற்கான திட்டமிடலும், உழைக்க தயாரான மனமும் போதும்... திருவல்லிக்கேணியின் குசேலர் தனத்தை விரட்டியடிக்க.
        எனது வாழ்க்கையில் நான் கண்டுகொண்டது ஒரு விஷயம் தான். எனது careerன் ஆரம்பத்தில் எனது உணவு, உடை, இருப்பிடம் இதற்கான உத்திரவாதத்தை அளிக்கும் எந்த ஒரு வேலையையும் செய்ய தயாராய் இருந்தேன். அதுவே எனக்கு பெரும் நிம்மதியையும் எனது இலக்கு நோக்கிய திட்டமிடலுக்கு வழியையும் அளித்தது. அடிப்படை தேவைகளை பெறுவதே போராட்டமாக இருந்தால், அதற்கே நம் அனைத்து சக்தியையும் செலவழித்தால் வாழ்க்கையின் லட்சியம் பற்றி எப்படி யோசிக்க முடியும்?
         கிடைத்த வேலை என்று சேர்ந்து விட்டால் பின்பு படித்த படிப்புக்கான வேளையில் சேர்வது கடினம் என்று கூறுபவர்கள் அதனை சரியான நேரத்தில் யோசித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். நமது துறையில் தகுந்த ஆட்களை பிடிக்க முயற்சி செய்திருக்க வேண்டும். தும்பை விட்டு வாலை பிடிப்பவர்கள் சில கடினமான தருணங்களை தாண்டித்தான் வரவேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், கண்டிப்பாக ஒருவனுக்கு கடவுள் எல்லா கதவுகளையும் அடைத்து வைத்திருப்பது இல்லை. கொஞ்ச காலம் கிடைத்த வேலையை செய்து விட்டு தக்க தருணம் வந்ததும் சரியான இலக்கை அடைந்த நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.
        உச்சமாக நாம் கருதும் I.T துறையில் சென்னையில் இருக்கும் மலையாளிகளில் பலரின் முதல் வேலை இங்குள்ள கேரளா உணவகங்களில் தான் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இதில் உள்ள நுட்பம் என்னவென்றால் அங்குதான் உணவும், படுக்க இடமும் இலவசம்.
 
 

Wednesday, July 9, 2014

VGN இன் அராஜகம்

     ன்றைய மத்திய தர வர்கத்தின் பெரும் கனவு சொந்த வீடுதான். சொந்த வீடு வாங்காமல் என்னதான் பிள்ளை குட்டிகளை படிக்க வைத்து, அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்பி, ஆஸ்திரேலியாவில் கல்யாணம் கட்டி கொடுத்தாலும், வாழ்ந்த திருப்தி கிடைக்காது.
     அதனால்தான் ஊரில் முப்பாட்டன் காலத்தில் இருந்து பாதுகாத்து வந்த பல ஏக்கர் நிலத்தை விற்று சென்னையில் ஆயிரம் சதுர அடி பிளாட் வாங்க முன்பணம் கட்ட நாம் தயங்குவது இல்லை. அதன் பின் நம் வாழ்க்கையின் மொத்த வருவாயையும் சுமார் ௨௦ ஆண்டுகளுக்காவது EMI கட்டிக்கொண்டு இருப்போம். எவ்வளவு பெரிய அபத்தம்? நிற்க.
     அபத்தம் என்று தெரிந்தும் நாங்கள் அதை செய்யத் துணிந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு VGN developers இருங்காட்டுக்கோட்டையில் ஆரவாரமாக ஆரம்பித்த BRIXTON - Integrated Township சென்று மாடல் பிளாட் பார்த்தோம். பிடித்திருந்தது. அதுவும் கம்பெனிக்கு நேர் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் இருந்ததால் வேறு ஏதும் யோசிக்கவில்லை. அங்கே எங்களைப்போல விசாரிக்க வந்தவர்கள் VGN மிகவும் நம்பகமான நிறுவனம் என்று பரவலாக பேசிக்கொண்டதைப்பார்க்கவும் ஏதோ கடவுளே பார்த்து எங்களை அங்கு அனுப்பிவைத்ததாக நினைத்துக்கொண்டோம்.
     மேலும் இந்த வளாகம் மிகப்பெரியது..கிட்டத்தட்ட ௨௦௦௦ வீடுகள், உள்ளேயே நகரின் சிறந்த பள்ளியின் கிளை, திரை அரங்குகள், நூலகம், நீச்சல் குளம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்கான இடங்கள், அது..இது,என்று ஏகப்பட்ட வசதிகள் வரப்போவதாகவும் சொன்னார்கள்.அதற்கு பராமரிப்பு கட்டணமாக சொற்ப தொகை ஒன்றை மாதம் தோறும் கொடுத்தால் போதும் என்று சொல்லவும் இந்த VGN முதலாளியின் படத்தை மறக்காமல் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.
     ஏற்கனவே மாடல் ப்ளாட்டைப் பார்த்து வாயைப் பிளந்து நின்ற எங்களை வீழ்த்த சேல்ஸ்மேன்கள் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கவில்லை.மிக எளிதாக விழுந்தோம். அதுசரி நமக்கு என்ன முன்னே பின்னே செத்து பழக்கமா? இந்த விஷயத்தில் உள்ள எந்த உள்குத்துகளையுமே நாங்கள் அறிந்து இருக்கவில்லை. நாங்கள் நம்பியது ஒரே விஷயம்தான். அது VGN என்ற பெயர். அனேகம்பேர் அவர்களைப்பற்றி மிக நல்லவிதம்மாக சொன்னதால், ஹமாம் சோப் போட்டு குளிக்கும் குழந்தைபோல மிக பாதுகாப்பாக உணர்ந்தோம். சரிபார்க்கவேண்டியது என நாங்கள் நினைத்தது கட்டிடம் வாஸ்த்துபடி உள்ளதா என்று மட்டுமே. மற்றபடி இந்த வளாகத்திற்குள் தேவலோகமே வரப்போவதாகச் சொன்னார்கள். இன்றைய தினத்தில் இருந்து இரண்டே வருடம், உங்கள் வீடு உங்கள் கைகளில் இருக்கும் என்று பசப்பினார்கள். கண்ணை மூடிக்கொண்டு காட்டிய இடத்தில் எல்லாம் கைஎழுத்துப்போட்டோம். அக்ரீமென்ட்டையெல்லாம் வாசித்து பார்க்கவே அவர்கள் அவகாசம் தரவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக VGN என்ற பிம்பம் எங்களை அப்படி யோசிக்க விடவில்லை.
      ஆயிற்று..முன்தொகை 15% , கட்டி ஒரு மாதத்தில் மற்றொரு 15% தொகை பின்பு மீண்டும் ஒரு மாதத்தில் 25% தொகை (வங்கி கடன்) என்று எந்த வேலையும் ஆரம்பிக்கும் முன்பே 55% தொகை எங்களிடம் பிடுங்கப்பட்டது.
     ஒரு வருடம் ஒன்றும் நடக்கவில்லை. வாங்கியவர்களுக்கு சொரணை வந்து கேட்க ஆரம்பிக்கவும் பற்பல சால்ஜாப்புகளுக்கு பின் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சாவகாசமாக ஆரம்பித்தார்கள். கட்டுமானம் ஒரே சீராக நடக்காமல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து கட்டினார்கள். அப்போதே விழித்துக்கொண்டு இருக்கவேண்டும். என்ன செய்ய விதி வலியது அல்லவா?
     அவர்கள் சொன்ன இரண்டு வருடம் கடந்த போது பாதி வேலை கூட முடிந்திருக்கவில்லை. மீண்டும் போய் என்ன ஏதென்று கேட்டபோது ஒப்பந்தப்படி இன்னும் ஆறு மாதம் grace பீரியட் இருக்கிறது. அதற்குள் முடித்து விடுவோம் என்றார்கள்.
     Grace பீரியடா? அப்பிடின்னா? அடித்து பிடித்து வீட்டில் போய் அக்ரீமேன்ட்டை பார்த்த போதுதான் தெரிந்தது நாங்கள் கைப்புள்ளைக்கே கைப்புள்ளை என்று. ஒரு வாடிக்கையாளரை எப்படியெல்லாம் ஏமாற்ற முடியும் என்று அந்த அக்ரீமென்ட் மூலம் ஒரு பாடமே எடுத்து இருந்தார்கள்.

பாடம் 1
 
கீழே உள்ள அட்டவணை இதைப்புரிந்து கொள்ள உதவும் என எண்ணுகிறேன். இது ஒரு 4 மாடி கட்டிடம் கொண்ட அபார்ட்மெண்டின் மாதிரி  payment schedule.
 
Payment Schedule
Stage Payment
Booking Advance 15%
Within 30 days of booking 15%
During Basement 25%
Completion of First floor 10%
Completion of2nd floor 10%
Completion of 3rd floor 10%
Completion of 4th floor 10%
During Handover 5%
Total 100%

    ஆக இந்த அட்டவணைப்படி எடுத்துக்கொண்டால் வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே நம்மிடமிருந்து 55% தொகையை கறந்து விடுவார்கள். அதன்பின்பு 1 வருடம் மொத்த ப்ரொஜெக்ட்டும் விற்பனையாகும் வரை நம் பணத்தை வைத்து   ரொட்டேசன் செய்வார்கள்.ஒரு வேலையும் ஆரம்பித்து இருக்க மாட்டார்கள். அதாவது அது அவர்களுக்கு நாம் தரும் வட்டி இல்லாத கடன்..அதன் பின்பு வேலை ஆரம்பித்து கட கட வென்று 4 மாடிக்கான structure மற்றும் சுவர்களை எழுப்பி விடுவார்கள். இதுவரை அவர்களுக்கும் எளிதுதான். ஆனால் பின்பு வரும், ஏரியா டெவெலப்மென்ட் மற்றும் amenities தான் பிரச்சனையே. அதிக நேரமும் செலவும் பிடிக்கும். அதனை பற்றி அட்டவணையில் எங்கும் இருக்காது. நான்காவது மாடிக்கு அடுத்து நேரிடையாக Hand over என்று பொத்தம் பொதுவாக குறிப்பிட்டு இருப்பர். சரி இதில் என்ன ஏமாற்று வேலை?
    எப்படியும் இவர்கள் சொன்ன நேரத்திற்குள் கட்டி முடிக்கப்போவது இல்லை. ஆகையால் விற்பனை ஒப்பந்தம் போடும்போதே சந்தடியில்லாமல் Grace Period என்ற ஷரத்தை ஓசைப்படாமல் சொருகி இருப்பர். இதைப்பற்றியெல்லாம் ப்ளாட்டை விற்கும்போது மூச்சுகூடவிடமாட்டார்கள். நம்மில் பலர் ஒப்பந்தத்தின் முதல் பக்கத்தை படிக்கும்போதே மொழியின் கடுமையால் (அதிகபட்ச சட்ட நுணுக்கம் கொண்ட ஆங்கிலம்) கொட்டாவி விட்டு மூடிவிடுவோம். பெரும்பாலும் நமக்கு ஒதுக்கப்பட்ட பிளாட்டின் அளவுகள், விலை இதுபோன்ற மேலோட்டமான விஷயங்களைப்பார்த்து விட்டு போய்விடுவோம்.அதனால் (GP)grace period சமாச்சாரமே நமக்கு தெரியாது. அந்த GP யையும் தாண்டி இவர்கள் இழுத்துக்கொண்டே போனால் தாண்டி போகும் ஒவ்வொரு மாதத்திற்கும் அவர்கள் இழப்பீடு தரவேண்டும். அங்குதான் சூட்சுமமே..
     சாதாரணமாக எந்த ஒரு கட்டுமான நிறுவனமும் குறித்த நேரத்திற்குள் முடித்து தரவில்லையெனில்  ஒப்பந்த முடிவு நாளில்(Planned handover) இருந்து actual hand over வரை ஒவ்வொரு மாதமும் அதுவரை செலுத்தப்பட்ட பணத்திற்கு நடப்பு வங்கி வட்டி விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும். ஆனால் நமது பெரிய அண்ணன் VGN போட்ட ஒப்பந்தப்படி 95% பணம் செலுத்தி விட்டீர்கள், நாங்கள் நான்காவது தளம் வரை கட்டிடம் கட்டியாயிற்று. அதனால் கணக்கு சரியாகிவிட்டது. ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து சதவீதம் வேலைதான் மீதம் உள்ளது.(அதாவது development அண்ட் amenities) அதற்குறிய தொகையான 5% க்கு மட்டுமே வட்டி கொடுக்க முடியும் என்று சொல்கிறது. அதனை முடிக்க தோரயமாக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் GP எல்லாம் தாண்டி இரண்டு ஆண்டுகள். அதாவது அந்த இரண்டு ஆண்டுகளும் நாம் 95 Lacக்கு வட்டி கட்டிகொண்டிருப்போம் ஆனால் அண்ணன்  5 Lacக்கான  வட்டியை மட்டுமே திருப்பி தருவார். எப்பூடி?!!!
சரி தொலைந்து போங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து போடும் முன்பு இதை சரிபார்காதது நமது தவறுதான். அந்த ஐந்து சதவீத தொகைக்காவது நீங்கள் சொன்ன மாதிரி இழப்பீடு கொடுங்கள் என்றால் அடுத்த குண்டை போட்டார்கள்.
     அதாகப்பட்டது, மேற்சொன்ன அட்டவணைப்படி stagewise payment செலுத்தும்போது ஒவ்வொரு முறையும் பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை தாமதம் செய்து இருக்கிறீர்கள். இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஆகிவிட்டது. அதை கூட்டி கழித்து பார்த்தால் நீங்கள்தான் எங்களுக்கு பல ஆயிரங்கள் இழப்பீடு தரவேண்டியிருக்கிறது என்கிறார்கள்..ஆஹாக..அபாரம்...இது பாடம் எண் 1.

பாடம் 2

சரி போய் ஒழியுங்கள்..வீட்டை சீக்கிரம் கொடுங்கள்.வாடகை கொடுத்து மாளவில்லை என்று கேட்டோம். சரி inspectionக்கு வாருங்கள். வந்து No Dues என்று எழுதிக்கொடுத்துவிட்டு மீதம் தரவேண்டிய 5% தொகையை கொடுத்துவிட்டு தாராளமாய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
வீட்டை பார்த்ததும் செத்தே போய்விட்டோம்.
  1. முதலாவதாக மாடல் ஹௌஸ் இல் காட்டிய எதற்கும், கட்டப்பட்ட வீட்டின் தரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  2. வீட்டிற்க்கு EB இணைப்பு இன்னும் கொடுக்கப்படவில்லை.
  3. amenities என்ற பெயரில் இவர்கள் சொன்ன எதுவும் ( நீச்சல் குளம், நடைப்பயிற்சி பகுதி, தியேட்டர், பூங்கா, STP, RO, நூலகம், வணிக வளாகம், கடைகள், இன்னும் என்னனவோ...)உருவாக்கப்படவில்லை.
  4. தண்ணீர்- சுத்தமாக இல்லை. 6 போர்கள் போட்டும் தேவையான தண்ணீர் இல்லை. இதனை மிக கேஷுவலாக அவர்கள் சொன்ன போது எனக்கு பகீர்ரென்றது... 2000 குடியிருப்புகள் கொண்ட வளாகம் அமைப்பவர்கள் தண்ணீர் பற்றிய ஆய்வு செய்யாமலா இருந்திருப்பார்கள்? சண்டையிட்டு water table study ரிப்போர்ட்டை வாங்கினோம். அதில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மத்துவம் தான் என்று. இவர்களை என்ன செய்தால் தகும்? ஆக தண்ணீர் இல்லை என்று தெரிந்தும் ௨௦௦௦ வீடுகளை கட்ட துணிந்து இருக்கிறார்கள். என்ன ஒரு அலட்சியம்?!!!!!
  5. தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால் அவுட்சோர்சிங் தான் , என்ன மாதம் ஒரு 1500 ரூபாய் அதிகம் வரும் என்கிறார்கள்.
  6. இதில் எனது பயம் என்னவென்றால் இவர்களது அலட்சியம் தண்ணீர் விஷயத்தில் மட்டுமா இல்லை ஒட்டு மொத்த கட்டுமானதிலுமா? basement எல்லாம் எந்த லட்சணத்தில் இருக்கும்? முறையாக மண்பரிசோதனை செய்திருப்பார்களா?
  7. கரெண்ட்? நாங்கள் என்ன செய்வது EB கனெக்சன் தர தாமதம் ஆகும்.அதுவரை உங்களுக்காக generator வைத்து சப்ளை செய்கிறோம்.அதற்க்கு தனியாக  மாதம் ஒரு 2500ரூபாய் கொடுத்துவிடுங்கள் என்கிறார்கள்.
  8. ஆக இவர்கள் வீடு hand overக்கு தயார் என்று கூறிய பொது அங்கு தற்கால மனிதன் வசிப்பதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை. கற்கால மனிதன் முயற்சி செய்யலாம். ஆனால் கரென்ட் கனெக்சனே இல்லாமல் No Dues என்று formஇல் எழுதி தர சொல்லுகிறார்கள்.அதற்கான தொகையை முதலிலேயே வாங்கிகொண்டு ... என்னே ஒரு நெஞ்சழுத்தம்...திமிர்...
  9. இது தவிர maintenance பீஸ் தனியாக சதுர அடிக்கு 2.50 ரூபாய் வீதம் கொடுத்து விடுங்கள்.சிம்பிள் என்கிறார்கள்.
  10. ஆக மொத்தம் ஒரு  1000ச.அ 2BHK பிளாட்டிற்கு மாதம் ரூ.6500 (EB,தண்ணீர்,பராமரிப்பு) தண்டம் அழுது நான் குடியிருக்கும் வீட்டை சொந்த வீடு என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
இதனை ஒரு சுய பொலம்பலாக சொல்லவில்லை. ஒருவேளை இது யாருக்காவது பயன்படலாம் என்பதே இந்த பதிவின் நோக்கம்.
மற்றபடி இவர்களை விட்டு விடுவதாய் இல்லை.  இங்கு வீடு வாங்கிய அனைவருக்குள்ளும் இதன் காரணமாய் கோபம் பொங்குகிறது..இவர்களை விடக்கூடாது என்றுதான் தோன்றும்.ஆனால் பல்வேறு காரணங்களால் யாரும் ஒன்று சேரவோ, ஒரு குழுவாய் சென்று VGN உடன் மல்லுக்கட்டவோ முடியவில்லை. இன்றைய வாழ்க்கை முறை நமக்கு இதை எல்லாம் கவனிக்க நேரம் கொடுப்பதில்லை. வேலைப்பழு அழுத்துகிறது. எதெற்கெடுத்தாலும் சண்டை போடவேண்டுமா என வீட்டிற்குள் இருந்தே குரல் வருகிறது.
 
மேற்கூறிய நமது பலவீனங்களே VGN போன்ற ஏமாற்று நிறுவனங்களின் பலம்...
 
பார்போம்.
 

 

Tuesday, July 8, 2014

இறைவன் உய்யும் இசை

   நான் அடிப்படையிலேயே கொஞ்சம் இளையராஜா கிறுக்குதான். ஆனால் இந்த இசைக்கோவையை நான் சிலாகிப்பதற்கு நிச்சயம் அந்த கிறுக்கு மட்டும் காரணம் கிடையாது. ஏனெனில் முதல் முறை இதை கேட்டு மயங்கிய போது இது இளையராஜாவின் இசை என்பது தெரியாது. இதனை ஒருமுறை கேட்டு பாருங்கள். இறைவனை உணர்வீர்கள். இந்த இசையின் வகை, அதன் அடிப்படை Genre என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால்,  முழுதும் கேட்டு முடித்த பின்பு நான் அடைந்த நிலையை நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவித்து உணர மட்டுமே முடியும்.

    இதனை ஒரு purposeless இசை எனக்கூறலாம். சினிமா பாடல்களை போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது இல்லை என நினைக்கிறேன். ஆனால் ஒருவிதமான spritual haunting இருக்கிறது. நிச்சயம் இது ஆன்மாவுக்கான இசைதான். போழுபோக்குக்காக மட்டும் இசையைக் கேட்பவர்களுக்கு பிடிக்குமா என தெரியவில்லை. நான் ஒன்றும் இசையை பிரித்துபோட்டு மேய்பவன் அல்ல என்றாலும், இந்த இசைக்கோவை ஏனோ முதல்முறையே எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

  பொதுவாகவே நுண்கலைகள் எல்லாம் மிக சிக்கலானவை. யாரும் யாருக்கும் ஊட்டிவிட முடியாது என்பது எனது எண்ணம். அதுவும் இசை ரசனை தனி நபரின் விருப்பம் சார்ந்ததுவே. இருந்தாலும் எதற்கும் ஒரு முறை இதை கேட்டுப் பார்த்து சொல்லுங்கள்.

இசைத்தொகுப்பு - "HOW TO NAME IT"
இசைக்கோவை   - "STUDY FOR VIOLIN"

அன்புடன்
முத்துராம் ஸ்ரீனிவாசன்  

Friday, May 30, 2014

மோடி உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

      மோடிக்கு இரத்தினக்கம்பளத்துடன் பிரதமர் பதவி கிடைத்து இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்களுக்கு தண்ணி காட்டிய பெரும்பான்மை மோடிக்கு கிடைத்து இருக்கிறது. இது அவருக்கு அக்கினி பரீட்சைதான்.
     "மண்ணு"மோகன் சிங் குக்கு கிடைத்த எஸ்கேப் பாயிண்ட் இவருக்கு இல்லை. சோனியா என் கைகளை கட்டி வைத்து இருந்தார் என்று அவர் சொல்லாவிட்டாலும் நாமாகவே சொல்லிக் கொண்டோம். அப்பாவி இமேஜை எப்படியோ காப்பாற்றி கொண்டு விட்டார். காங்கிரஸ் ஆட்சியினால் நொந்து போய் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மன்மோகன் மேல் பெரிய அதிருப்தி இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் மோடியின் நிலை அப்படி இல்லை. அவரை அப்பாவி என்றால் அவரே சிரித்துவிடுவார்.
      நாடு அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதீதமானது. எப்படி இந்த நிலையை உருவாக்கினார் என்பது கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவர் வகுத்த அரசியல் வியுகங்களையும், அவரது சந்தைப்படுத்தும் திறனையும் கவனித்தவர்களுக்கு தெரியும். அதன் அடிப்படையிலேயே இந்த நிமிடம் வரையிலான அவரின் அரசியல் வரலாற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட எனது எளிய மதிப்பீட்டின்படி அவர் ஒரு சராசரிக்கு கொஞ்சம் மேலான அரசியல்வாதியே தவிர நாட்டை காக்கவந்த மீட்பர் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஒரு சராசரி அரசியல்வாதி பதவியை அடைய என்னவெல்லாம் செய்வாரோ அவை எல்லாவற்றையும் செய்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
     ஆனால் அவர் நினைத்தால் வல்லரசு இந்தியாவின் சிற்பி என்ற பட்டத்தை போகிற போக்கில் தட்டி கொண்டு செல்ல முடியும். எதிர்காலத்தில் மோடியை நாம் ஜார்ஜ்வாஷிங்டன், லிங்கன், லீ க்வான் யூ வரிசையில் வைக்க கூட வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு. ஆனால் இதெல்லாம் அவருக்கு தோன்ற வேண்டும்.
     ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பில் மோடி உடனடியாக கவனிக்க வேண்டியதாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

1) விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள். (இலவச இளிச்சவாயதனங்கள் அல்ல.) பாசன வசதி, சந்தையாக்கம், நதிநீர் பங்கீடு முதலியவற்றில் மத்திய அரசு அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை செய்வது.

2) இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து திடமான நேர்மையான முடிவுகள் எடுத்தல். தண்டகாரண்யம் நிலக்கரி சுரங்கம், தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுத்தல் போன்றவை சம்பந்தமாக வெள்ளை அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். Eco System பாதிக்கும் என்ற பட்சத்தில் தாட்சண்யம் பார்க்காமல் திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். காடுகள், ஆறுகள், மற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

3)  இலங்கை, பாகிஸ்தான், சீனா உறவுகள் குறித்த சாத்தியங்கள் நேர்மையான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தென்னிந்தியாவிலும் தீவிரவாதம் தலைதூக்க வாய்ப்புகள் உண்டு.

4) மாநில அரசுகளோடு இணைந்து பெட்ரோல்,உணவு, மருத்துவப் பொருட்களின் விலைவாசி முறைப்படுத்தல்

5) உண்மையான, நிலையான வேலை வாய்ப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல். சுய வேலை வாய்ப்புக்கான ஒத்துழைப்பு ( ஒற்றை சாளர முறை, கடன் பெரும் முறையை எளிமை ஆக்குதல் போன்றவை)

6) பன்னாட்டு நிறுவனங்களை ஒரு வரம்புக்குள் முறைப்படுத்தி, அவற்றின் தொழிலாளர் நலன் குறித்த கொள்கைகளை தொடர்ந்து கண்காணித்தல். இதை செய்யாததால் தான் நமது வாழும் முறையில் பெரும் மாறுதல் (கேடு) அடைந்திருக்கிறது. நாம் இயந்திரங்களாக மாற்றப்பட்டு உள்ளோம். நமது நாட்டின் மொத்த மனித வளமும் சுரண்டப்பட்டு கொரியாவுக்கும், UK, US க்கும் கொளுத்த பணமாக சென்றடைகிறது. பிச்சைக்கார அரசின் அமைச்சர்கள் எலும்புத்துண்டை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு, TDS ஐ இன்னும் எப்படி எல்லாம் கறாராக வசூலிக்கலாம் என்று யோசித்து சட்டம் போடுகிறார்கள்.

7)  வேளாண் நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் கொள்ளை போன்றவை மத்திய அரசின் வரம்புக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இவை அண்டை நாடுகளின் பகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு சேர்ந்து கட்டாயம் இதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

இவை எல்லாம் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள்தான். ஆனால் இவை எல்லாம் மிக அவசியமானவை. துருப்பிடித்த அரசு இயந்திரம் மற்றும் அதன் அங்கத்தினர்கள் அவ்வளவு எளிதாக எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள், மாற்ற விடவும் மாட்டார்கள்.

எனக்கு கொரியன்களை பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கும். தேச பக்தியை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு அவர்களின் அலுவலகங்களில் பயன்படும் சிறிய பின் கூட கொரியா தயாரிப்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தரம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

அத்தகைய மனோ நிலை 30% இந்தியர்களிடம் இருந்தால் கூட மோடி தனது லட்சியமாக கூறிகொள்பவை மிக எளிதாக நிறைவேறி விடும்.

     

Friday, May 16, 2014

பாராளுமன்ற பொது தேர்தல் - 2014

    வந்து விட்டது தேர்தல். இனி சிறிது நாட்கள்  கூத்துகளுக்கு பஞ்சமே இருக்காது. அரசியல் வியாதிகள் நடத்தும் நாடகங்கள்  ஒருபக்கம் என்றால் அவர்களுக்கு இணையாக சில சமயம் அதிகமாகவே வாக்காளர்களும், பத்திரிகைகள் மற்றும் பிற ஊடகங்கள் அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும்.

பாராளு மன்ற தேர்தல் என்பதால் தேசிய அளவில் பேரங்களும், வியுகங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும். தமிழ்நாட்டின் நிலவரத்தை கடந்த ஒரு மாதம் மேலோட்டமாக கவனித்ததிலேயே எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

    வழக்கம் போல கட்சிகள் புதிய தர்மங்களையும், கொள்கைகளையும் வகுத்துக்கொண்டு
கூட்டணி கடையை விரிக்க ஆரம்பித்து விட்டன. இந்தியாவின் பாரம்பரிய அடையாளமான காங்கிரஸ் சீந்துவாரின்றி கிடக்கிறது. மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிக்க அவர்களிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், ஆட்டையில் மிகுந்த ஆசையுடன் கலந்து கொள்கிறார்கள்... மானம்கெட்டத்தனத்தின் உச்சம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திரவிடக்கட்சிகளுக்கு மாற்றாய் இருப்பார் (இருக்க வேண்டும்) என எதிர்பார்த்து மக்களே மகுடம் சூட்ட தயாராய் இருந்த போதும் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து தன் டவுசரை தானே கிழித்துக்கொண்டார் விஜயகாந்த். அவர்  இப்போது பி.ஜே.பி. யிடம் கெத்து காண்பித்து கொண்டு இருப்பது ஆச்சர்யம். மோடி அலை இந்தியா முழுவதும் சுனாமி போல சுழன்று அடிப்பதாகச் சொல்லும் (ஓரளவு உண்மையும் கூட) பி.ஜே.பி.யும் அவரை பிடித்து தொங்கி கொண்டிருப்பது அதை விட ஆச்சர்யம். இதற்க்கு பதிலாக தனியே நின்று தமிழ் நாட்டில் தங்கள் பலத்தை சோதித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக நல்ல பலன் இருக்கும். அப்படியே தே.மு.தி.க கணிசமான தொகுதியை கைப்பற்றினால் கூட அந்த நேரத்தில் கூட்டணி அமைத்தால் போயிற்று.. என்ன சில அமைச்சர் பதவிகளை கொடுக்க வேண்டி இருக்கும். அது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் எனக்கு என்னவோ தே.மு.தி.க தனியாக நிற்பது அவர்களுக்குத்தான் ரிஸ்க் என்று தோன்றுகிறது. ஆகையால் பி.ஜே.பி விஜயகாந்த் விஷயத்தில் கறாராகவே நடந்து கொண்டிருக்கலாம்.

ஜெ.ஜெயலலிதா
எப்பொழுதுமே எனக்கு அதிசயமாகத்தான் தெரிகிறார். கீழ்க்கண்ட காரணங்களால்..

1) இளம்வயதில் இருந்து அரசியலுக்காக தயாரிக்கப் பட்டவர் இல்லை ஆனாலும் முதுபெரும் அரசியல்வாதிகளுக்கே தண்ணி காட்டியவர்.

2) தனக்கு எம்.ஜி.ஆர். மூலம் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தைக் கொண்டு அவரை விட கறாரான ஆளுமையாக தன்னை ஆக்கிக்கொண்டு மொத்த அ.தி.மு.க வும் தான் மட்டுமே என்ற பிம்பத்தை நிறுவியது.

3) ஒரு கட்சியை, அரசை வெற்றிகரமாக நடத்த வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்கள் தேவை இல்லை என நிரூபித்தது.

4) "தலைமைக்கு எதிராக நாம் எது செய்தாலும் அவருக்கு எப்படியும் தெரிந்து விடும்"- என்ற நிரந்தரமான ஒரு பயத்தை கட்சியின் ஒவ்வொரு கட்ட தலைவர்களிடம் கொண்டு வந்து அதனை கட்டி காப்பது ஹிட்லருக்கு பின் இவர்தான்.

5) 3 முறை முதல் அமைச்சராக இருந்தும் உருப்படியாக எதையுமே செய்யாதவர். சமூகத்தின் மீதோ, வாக்களித்த மக்களின் மீதோ எந்த ஒரு பயமும், குறைந்த பட்ச அக்கறையும் இல்லாதவர்.
தான் செய்வது எந்த வகையிலும் சரியல்ல என்பது தெரிந்தும் தவறுகளை பகிரங்கமாக செய்பவர்.
மு.க. இவரை விட மெகா  ஊழல்களை செய்தாலும் அனைத்தும் திரைமறைவில் விஞ்ஞானப் பூர்வமாக நடக்கும். பொதுமக்களிடம் ஒரு குறைந்த பட்ச பயம் இருக்கும். வாக்களித்தவனுக்கு தெரிந்தால் சிக்கலாகிவிடுமே என்ற பயம் இருக்கும். இப்படி நான் சொல்லுவது மு.க வுக்கு பூச்செண்டு குடுப்பது என்பது ஆகாது.ஆனால் இவர் அப்படி எல்லாம் மெனக்கெடுவது இல்லை. எதையுமே மத யானையின் விவேகத்தோடுதான் செய்வார். இதனை தன்னம்பிக்கை, மன உறுதி.. என்று நம்மை நம்ப வைத்தது எல்லாம் "சோ" போன்ற அறிவுஜீவிகளின் வேலை.

6) தனிமனித துதி யின் உச்சக்கட்டத்தை தமிழக மக்கள் பார்க்க கொடுத்துவைத்தது இவரால் தான்.
சாதரணமாக யாருமே கேட்க கூச்சப்படும் துதிகளை ஜஸ்ட் லைக் தட் கேட்டு அனுபவிக்க தனி திறமை வேண்டும். தன்னை விட வயதில் மூத்தவர்களைக் கூட காலில் விழ வைத்து பார்த்தது பரவலாக பேசப்பட்டாலும் அதுவே இவரின் அடையாளமாகிப் போனது.
இதனை எல்லாம் பீகார், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் செய்தால் அது பெரிய விஷயம் இல்லை.
தமிழ்நாடு ஓரளவுக்கு விழிப்புணர்ச்சி அடைந்த மாநிலம் தான். மல்லுக்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு நல்லது கெட்டது பிரித்து பார்க்க தெரிந்த நம்மிடையே இதை செய்வது நிஜமாகவே சாதனைதான்.

ஜெயலலிதா இங்கு நடந்து கொள்வது போல கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தால் என்றைக்கோ அரசியலில் இருந்து மூட்டை கட்டி அனுப்பி இருப்பார்கள். ஆனால் அ.தி.மு.க வினர் இவரை எப்படி மீண்டும், மீண்டும் சகித்துக்கொண்டு சந்தோஷமாக அடிமைத்தனத்தை அனுபவிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

பொதுமக்களுக்கும் இவரின்பால் என்ன ஈர்ப்பு என்பதும் புரியவில்லை. இப்பொழுதும் இவர் நிச்சயமாக ஓடுகின்ற குதிரைதான். அதிமுக வுக்கு விழும் ஓட்டுக்களுக்கு இரண்டே காரணங்கள் தான்.
       1) ஜெயலலிதா
       2) முந்தைய ஆளும் கட்சியின் செயல்பாடுகள் (எதிர்ப்பு அலை)...மற்றபடி தனிப்பட்ட வேட்பாளருக்காக என்று பெரும்பாலும் ஓட்டுக்கள் விழுவது இல்லை.ஜெ. அதை விரும்புவதும் இல்லை.

இவரின் கூட்டணி தர்மம் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் தா.பா., சரத் குமார் போன்றவர்கள் பொதுவாக எல்லோருக்குமான வகுப்பில் நடத்தும் பாடங்களை கற்றுக்கொள்வதில் விருப்பம் காட்டுவதில்லை. தனியே சிறப்பு வகுப்பு வைத்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அம்மா வேறு வழி இல்லாமல் சிறப்பு வகுப்பு எடுத்ததில் முக்கியமான பாடம் ஒன்றை சமீபத்தில் கற்றுகொண்டார்கள்.
செயல்பாடுகளை பொறுத்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழ்நாடு முன்னேறி விட்டால் இவர் வி.ஆர்.எஸ். வாங்கவேண்டியதுதான் , ஆனால் எனக்கு ஜெயலலிதா பிடிக்காது ஆனால் ஓட்டு மட்டும் ரெட்டலைக்குதான் என்று கூறும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் இவர் தொடர்ந்து போட்டியில் இருக்கலாம். இவரின் பிரதமர் கனவினை அபத்தம் என்று கூறி அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது.

மு.கருணாநிதி

இந்த நூற்றாண்டின் அக்மார்க் அரசியல்வாதி.
அரசியல்வாதிக்கான இலக்கணங்கள் தரம் குறைய ஆரம்பித்தது இவர் காலத்தில் இருந்துதான்.
சந்தர்ப்பவாதத்தினை இராஜதந்திரம் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான்.
பேசிப்பேசியே நாட்டை ஆள முடியும் என்று நிரூபித்தவர். தமிழ் சினிமாக்களில் அரசியல்வாதிகள் வில்லனாக காண்பிக்கப்படுவதற்கு inspiration இங்கிருந்துதான் வந்தது கூறலாம்.

2006 இல் இவருக்கு கொடுத்த வாய்ப்பினை இவர் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் 2/5 என்ற அளவில் ஆட்சி செய்திருந்தால் கூட இன்று தமிழக மக்களின் மனதில் மகத்தான இடத்தை பெற்று இருந்திருப்பார். என்றும் அழியாத தமிழின தலைவர் என்ற பிம்பம் உருவாகி இருந்திருக்கும்.
ஆனால் தன் குடும்ப, சுய நலனுக்காக இவர் அடித்த அருவருப்பான ஸ்டன்ட்கள், இலங்கை தமிழர் விவகாரத்தில் செய்த துரோகம், 2G அலைக்கற்றை ஊழல் போன்ற விஷயங்கள் இவரின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைத்தன.

இப்போது இவரது மகன்களாகிய ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் போர் 2 ஜெயலலிதா வுக்கு சமம். இவரது ஆட்சி காலம் மொத்தத்தையும் கணக்கில் எடுத்து பார்த்தாலும் தமிழ்நாடு பெரிதாக ஒன்றும் முன்னேற்றம் காணவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான திட்டங்கள் இவரின் குடும்ப வளர்ச்சிக்காக செய்யப்பட்ட விஞ்ஞான ஊழல்கள் தான். நகர்ப்புறங்களில் கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு கவனிக்கப் பட்டன. கிராமப் புற மக்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்டது.

இவர் ஒரு நிகழ மறுத்த அற்புதம். இவர் மேல் தமிழன் வைத்திருந்த நம்பிக்கையை அற்பமாக்கிய பெருமை இவரையே சேரும். ஆனால் அடுத்து வந்த ஜெயலலிதாவின் ஆட்சி கருணாநிதியே தேவலை என்ற மனப்பான்மையை ஓரளவுக்கு உருவாக்கி வைத்து உள்ளது. கணிசமான கரண்ட் கட் இவருக்கு பெரிய அளவு ஆதரவை பெற்று தர வாய்ப்பு இருக்கிறது.


ராமதாஸ் & கம்பெனி

அப்பாவி மக்களுக்கு சாதி வெறி ஏற்றி அதில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கெல்லாம் (சட்ட மன்ற தேர்தலில்) இவர்கள் என்றும் வந்து விடப்போவது இல்லை என்பது உண்மை. ஆகவே இது ஒரு விதத்தில் நிம்மதியை கொடுத்தாலும், தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள எத்தனை தருமபுரி, மரக்காணம் சம்பவங்களை அரங்கேற்றுவார்களோ என்று எண்னும்போது அந்த நிம்மதி போய்விடுகிறது.

என்னை பொறுத்தவரை தொடர்ந்து ஒரு 3 தேர்தல்களாவது இது போன்ற சாதி கட்சிகளை சம்பந்தப்பட்ட சமூகத்தினரே புறக்கணிக்க வேண்டும். வேறு தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

ராமதாஸ் ஜெயிக்கும் குதிரையை இனம் கண்டு அதன் காலில் விழுந்தாவது பின் முதுகில் தொத்தி கொண்டு விடுவதில் கில்லாடி. ஆனால் கடந்த இரண்டு முறைகளில் சொதப்பி விட்டது.
இந்த முறை கிட்டத்தட்ட ஜெயிக்கும் என பெரும்பாலானோர் நினைக்கும் கூட்டணிக்கு கொஞ்சம் பிகு செய்தாலும் வந்து விட்டார். பார்க்கலாம்..


காங்கிரஸ் (சோனியா, ராகுல், ப.சி., இளங்கோவன், GK.வாசன், ஞானதேசிகன்)

உண்மையில் நான் இவர்கள் பிரச்சாரம் செய்வதை காண மிகுந்த ஆவலாக இருக்கிறேன். குறிப்பாக ப.சிதம்பரம் என்ன சொல்லி மக்களை வாக்கு கேட்பார்?
1) பெட்ரோல் விலை ரூபாய் 45-->75 என மாற்றியதை சொல்லியா?
2) அத்தியாவசிய பொருட்களின் விலை எவரெஸ்ட் அளவுக்கு ஏற்றிய விபரம் சொல்லியா?
3) வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத மெகா ஊழல்களை நடத்திய சாதனைகளை சொல்லியா?

என்னமோ போங்க....

எனது ஆசை (எதிர்பார்ப்பு) என்ன என்பதை கீழே காணலாம்.

தமிழக அளவில்..

அதிமுக  - 11 சீட்
திமுக   - 8 சீட்
பா.ஜ.க - 15 சீட்
மற்றவை - 5 சீட்

இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்...

தேசிய அளவில்

ப.ஜ.க (தனிப்பட்ட வெற்றி) - 275
கூட்டணியுடன் - 345 இடங்களில் வெற்றி பெறவேண்டும்... இந்த தொங்கு சபை எல்லாம் வேண்டாம். நமது அரசியல் வியாதிகள் அதுக்கு லாயக்கு இல்லை.

பாப்போம்.....

பி.கு.
இந்த கட்டுரையை இப்போது பார்க்கும் போது சற்று குழப்பமாகத்தான் இருக்கும். நான் இதை எழுத ஆரம்பித்தது சில மாதங்களுக்கு முன்னாள். இப்போதான் போஸ்ட் பண்ண சந்தர்ப்பம் கிடைச்சது...
ஹி..ஹி...ஹி...!!!

ஆனால் தேசிய அளவில் எனது விருப்பம் நிறைவேறியது என நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம்...